Home /News /chennai /

டிப்தீரியா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்... தமிழகத்தில் 13 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி

டிப்தீரியா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்... தமிழகத்தில் 13 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி

தடுப்பூசி

தடுப்பூசி

Chennai | கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மூலம் தடுப்பூசி செலுத்துவது மந்தம் ஆனதால் ஜனவரி முதல் 13 குழந்தைகளுக்கு டிப்தீரியா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படக் கூடியது தொண்டை அடைப்பான் எனப்படும் டிப்தீரியா நோயாகும். இந்த நோய் சுவாச குழாயில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு திணறல் ஏற்படுத்தக் கூடும். ஆனால் உரிய நேரத்தில் தடுப்பூசிகள் செலுத்தி வந்தால் இந்த நோயை முழுவதும் தவிர்த்து விடலாம். இந்த நோய் பெரும்பாலும் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே தாக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு போதிய அளவில் டிப்தீரியா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனவே அவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவிக்கிறார்.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் 70 பேர் நோய் அறிகுறிகளுடன் இருந்ததாகவும் அதில் 13 பேருக்கு தொற்று உறுதியானதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானால் அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள அனைத்து 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் பள்ளி குழுக்கள் முலமாகவும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கிறார்.

இந்த நோய்க்கு ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதங்களிலும் அதன் பின் ஒன்றரை வயதிலும் தடுப்பூசி வழங்க வேண்டும். அதன் பின்  ஐந்து வயதில் மீண்டும் ஒரு பூஸ்டர் செலுத்த வேண்டும். மேலும் 10 வயதில், பிறகு 15 வயதில் வழங்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாவிட்டால், இந்த நோய் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருந்தியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் கூறுகையில், தொண்டை அடைப்பான் எனப்படும் இந்த நோயினால் தொண்டையில் இளங்கருப்பு நிறத்தில் ஒரு சவ்வு உருவாகியிருக்கும். இதனால் முழுங்க முடியாது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில நேரங்களில் சவ்வு கிழிந்து சுவாச குழாயில் சிக்கிக் கொண்டு மூச்சு திணறல் ஏற்படும். சில வகை டிப்தீரியா இருதயத்தை பாதிக்கக் கூடும், நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கிறார்.

டிப்தீரியா நோய் தடுப்பூசியால் முழுவதும் தவிர்க்கப்படக் கூடிய நோய் என்பதால், தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு தான் டிப்தீரியா நோய் ஏற்படுகிறது. இது குறித்து பச்சிளங் குழந்தைகள் நல மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி, மருத்துவர் சீனிவாசன் , வழக்கமாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள், சரியாக கொடுக்கப்படுகிறது.

Also see... ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.80 வரை உயர்வு

ஆனால், 5 வயதில் கொடுக்க வேண்டிய தடுப்பூசியை போட பெற்றோர்கள் தவறுகிறார்கள் என கூறுகிறார். குழந்தை பெரியதாகி விட்டது என்ற தைரியமும் அடுத்த குழந்தை பிறந்து விட்டால் அதை கவனிப்பதிலேயே மும்முரமாக இருப்பதாலும் 5 வயதில் கொடுக்க வேண்டிய டிப்தீரியா தடுப்பூசி வழங்க மறக்கிறார்கள் என கூறுகிறார். எனவே 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் டிப்தீரியா தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Vaccine

அடுத்த செய்தி