சென்னை பாரி முனையில் இயங்கி வருகிறது தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமையகம். இங்கிருந்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியின் நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் நிர்வாக வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.61 கோடி பணம் பல்வேறு வங்கிகளுக்கு அடுத்தடுத்து சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
நூதன முறையில் ஆன்லைனில் கொள்ளையடிக்கப்பட்டதை கண்ட வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக மெயில் ஐ.டிக்கு ஹேக்கர்கள் ஃபிஷிங் முறையில் லிங்க் அனுப்பியதும் அதனை வங்கி ஊழியர்கள் தவறுதலாக கிளிக் செய்து ஓபன் செய்ததும் தெரிய வந்தது.
ஹேக்கர்கள் அனுப்பிய லிங்கை ஊழியர்கள் ஓப்பன் செய்தவுடன் காத்திருந்த ஹேக்கர்கள், ஹேக்கிங் மென்பொருள் மூலம் கூட்டுறவு வங்கியின் நிர்வாக வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 2.61 கோடி பணத்தை அடுத்தடுத்து தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளையடித்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மெயில் ஐடியை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஹேக்கர்கள் டெல்லி உத்தம் நகர், பிந்தப்பூர் பகுதியில் பகுதியில் இருந்து ஹேக் செய்து பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் டெல்லி உத்தம் நகர் சென்றனர். அங்கு நைஜீரியன் கொள்ளை கும்பல் ஒன்று வீட்டை வாடகைக்கு எடுத்து ஹேக்கிங் மூலம் பணம் கொள்ளையடித்ததை கண்டுபிடித்தனர். அந்த வீட்டில் இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எகானே காட்வின்(37), அகஸ்டின் (42) என்பது தெரிய வந்தது. மூன்று ஹேக்கிங் மென்பொருள் மூலம் சென்னையில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இந்த நைஜீரியன் கொள்ளை கும்பல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு இதே போன்று மெயில் அனுப்பி ஹேக் செய்து பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்திருப்பதும் இன்னும் பல நிறுவனங்களுக்கு ஹேக்கிங் லிங்க் அனுப்பி இருப்பதும் தெரியவந்தது.
இந்த கும்பல் மீது பல்வேறு மாநிலங்களில் பல்வேறு ஆன்லைன் கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நைஜீரியன் கொள்ளை கும்பலைச் சேர்ந்த எகானே காட்வின் மற்றும் அகஸ்டின் ஆகியோரை சென்னை அழைத்து வந்த சைபர் கிரைம் போலீசார் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டு இவர்கள் பின்னணியில் இருப்பது யார்? எத்தனை வங்கிகளை ஹேக்கிங் மூலம் கொள்ளையடித்துள்ளனர். எவ்வளவு மதிப்பிலான பணம் கொள்ளையடித்துள்ளனர் என்பதை கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooperative bank, Crime News, Cyber crime, Cyber fraud, Tamilnadu police