மன்னர் ஆட்சியானாலும் மக்கள் ஆட்சியானாலும் கோயில் மக்களுடைய சொத்து எனவும் அது ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து இல்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமண விழா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையர்களுக்கு மங்கள நாண் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று 217 இணையர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் திருமண நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய அவர்,
“47 கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை உரிமையை மீட்டுள்ளோம். கோவில் பொதுசொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மீட்டு வருகிறோம். அனைத்து சாதியினரும் அரச்சகாரும் முறையை சாத்தியமாக்கியுள்ளோம். ஒன்றரை ஆண்டில் இந்த துறையில் மட்டும் செய்துள்ள சாதனைகள் ஏராளம்.
எந்த ஆட்சி என்றாலும், கோவில்கள் மக்களுக்கு தான். கோவில்கள் யாருடைய சொத்தும் இல்லை. குறிப்பிட்ட சிலரால் இதனை பொறுத்து கொள்ள முடியவில்லை. அரசியல் செய்ய காரணங்கள் இல்லாமல் பொய், பித்தலாட்டம் செய்கின்றனர்” என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு கட்டணமில்லா திருமணத்தை நடத்தி வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
“சேகர்பாபு ஒரு செயல் பாபு. பலமுறை நான் அவரை பற்றி கூறியுள்ளேன். முதலமைச்சர் தான், அமைச்சர்களை வேலை வாங்குவார். ஆனால், அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சரையே வேலை வாங்குவார். பல்வேறு திட்டங்கள், பணிகளை செய்து வருகிறார்.
இந்திய வரலாற்றிலே இந்து சமய அறநிலைதத்துறைக்கு இப்படி ஒரு சாதனை வந்ததில்லை. ஒன்றரை ஆண்டு காலத்தில் இத்துறையில் பல சாதனைகளை செய்துள்ளோம். இதனால் தான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாராட்டி வருகிறேன்.” என புகழாரம் சூடினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நாம் அண்ணா வழியில் பணியை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தை மக்கள் நம்மை நம்பி ஒப்படைத்துள்ளனர். அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதன் சாட்சியாக 5 முறை தலைவரிடம் ஆட்சியை கொடுத்த மக்கள், 6வது முறையாக அவரது மகன் என்னிடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். கலைஞர் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இடத்திலே ஒப்படைத்துள்ளனர். அதனை சிறப்பாக நடத்துவோம்” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Hindu Temple, Marriage