முகப்பு /செய்தி /சென்னை / தேநீர் விருந்து : ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த ஆளுநர்.. பங்கேற்பாரா முதலமைச்சர்?

தேநீர் விருந்து : ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த ஆளுநர்.. பங்கேற்பாரா முதலமைச்சர்?

முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ரவி

முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ரவி

நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

குடியரசு தின விழாவையொட்டி நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தொலைபேசியில் அழைப்பு விடுத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி.

ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், சட்டமன்றத்தில் உரையை மாற்றி படித்தது மற்றும் பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, விசிக தலைவர் திருமாவளவன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

விசிகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ஆளுநர் ஆளுநராக இல்லை, ஆர்எஸ்எஸ்காரராக செயல்படுகிறார். எனவே தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை, புறக்கணிக்கிறோம்” என நியூஸ் 18 செய்திக்கு பேட்டியளித்துள்ளார்.

இதேபோல மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டிர்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எனவே புறக்கணிக்கிறோம்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அதன் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மேலும் மதிமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார். இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் தேநீர் விருந்தில் பங்கேற்பாரா இல்லையா என்ற அறிவிப்பு ஏதும் வரவில்லை.

First published:

Tags: CM MK Stalin, Republic day, RN Ravi, Tamil Nadu Governor