சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎப் வாசன். போலீசார் அபராதம் விதித்துள்ள நிலையில், மீண்டும் விளம்பரம் தேடும் முயற்சியா? என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது போலீசாருடன் சர்ச்சையில் சிக்கவில்லை என்றால் தூக்கம் வராது என்பதுபோல.. மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎப் வாசன். நம்பர் பிளேட் இல்லாத காரில் டிடிஎப் பயணித்ததன் பின்னணி என்ன?
எம். பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலேஜ் ரோடு என்ற திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்களில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் லிங்கேஷ் மற்றும் யூடியூபர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கிற்கு வந்தனர். டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால் அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கமலா திரையரங்கு வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வழக்கமாக போக்குவரத்து விதிகளை கண்டுகொள்ளாத டிடிஎப் வாசன், வந்திறங்கிய வெள்ளை நிற சொகுசுக் காரில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெரியவந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால் போக்குவரத்து துறை போலீசார் டிடிஎப் வாசன் வாசன் வந்த காரை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த வாசனுக்கு தகவல் தெரியவர விரைந்து காவல்நிலையத்திற்கு சென்றார்.அங்கு வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தபோது, அந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார்.
ஆவணங்களை ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி வந்துள்ளனர் என்பது. நம்பர் பிளேட் இல்லாம காரை எடுத்து வந்ததற்கு 500 ரூபாயும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதற்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
காரின் உரிமையாளரான பிரவீன் என்பவர் அபராத தொகையை கட்டி உள்ளார். ஏற்கெனவே அதிவேமாக பைக் ஓட்டி அதை யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு இளைஞர்களை திசை திருப்புவதாக எழுந்த புகாரில் வாசன் சிக்கினார். பின் யூடியூப்பர் ஜிபி முத்துவை பின்னால் அமர வைத்து அதிவேகமாக பைக் ஓட்டிய விவகாரத்தில் வழக்கில் சிக்கினார். கடலூரில் விதிகளை மீறி கூட்டத்தை கூட்டிய விவகாரத்திலும் போலீசார் அவர்மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன்.
வழக்கம்போல் இதுவும் விளம்பரம் தேடும் நோக்கில் வாசன் மேற்கொள்ளும் நூதன முயற்சியாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் TTF வாசன் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக மாறி விடக் கூடாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, TTF Vasan