சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்றில் வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதர். தன்னிடம் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக உரையாடியதாகவும் செல்போனில் ஆபாசமாக பேசியதாகவும் மாணவியின் பெற்றோர்கள் சில தினங்களுக்கு முன் மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு புகார் அளித்துள்ளனர்.
வேதியியல் ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகள், ஸ்ரீதரின் பாலியல் தொல்லை தொடர்பான ஆடியோ, வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட ஆதாரங்களுடன் குழந்தை நல குழுவிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து குழந்தை நல அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணையில் கடந்த கல்வி ஆண்டில் சில மாதங்கள் ஆன்லைன் வகுப்பு நடந்து வந்தபோது ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுடன் வகுப்பு எடுக்கும் நேரத்தில் பேசி வந்ததும், தனது அத்துமீறலை அறியாமையால் அனுமதித்த ஒரு சில மாணவிகளை மட்டும் குறிவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் மாணவிகளின் நேரடி விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகு சில மாணவிகளுடன் ஆசிரியர் ஸ்ரீதர் வெளியில் செல்வதும் வகுப்பு நேரம் முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையிலேயே அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட மாணவிகளை வைத்து அவர்களுடன் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு ஸ்ரீதர் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர் ஸ்ரீதர் உரையாடிய வாட்ஸ் அப் சாட்டுகள் மற்றும் போனில் பேசிய உரையாடல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரங்களை அறிந்த ஆசிரியர் ஸ்ரீதர் கடந்த சில தினங்களாக தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து ஆசிரியர் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரை அடுத்து பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.