மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் அருகே மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், தொடர்ச்சியாக திமுகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துத்துறை சேவையை போற்றும் வகையில், சென்னை மெரினா கடலில், 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்கான, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தலைமையில், மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மே 17 இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நினைவுச்சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக பிரதிநிதி முனுசாமி, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலையை விட உயரமாக கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா என கேள்வி எழுப்பியதால், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் கூட்டத்தினரை சமாதானப்படுத்தினர்.
நியூஸ் 18 தமிழுக்கு பேட்டியளித்த பொதுமக்களில் பலர் நினைவுச்சின்னம் அமைப்பதை ஆதரித்தும், எதிர்த்தும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
முன்னதாக, சமூக செயற்பாட்டாளர் முகிலன், நீண்ட நேரமாக மேடையில் பேசிக்கொண்டிருந்ததால் , காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் மேடையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய சீமான், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கடலில் நினைவுச்சின்னம் அமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். பள்ளிக்கூடங்களை சீரமைக்க காசு இல்லை என்பவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்க மட்டும் ஏது பணம் எனவும் பேனா சிலை அமைத்தால், அதை உடைப்பேன் எனவும் பேசினார். அப்போது, திமுகவினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK Karunanidhi, Karunanidhi statue, Seeman