ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா என்ற இளம் பெண்ணை நேற்று நண்பகல், சதீஷ் என்ற 32 வயது இளைஞர் ரயில் முன் தள்ளி கொலை செய்தார். தண்டவாளத்தின் நடுவில் விழுந்த கல்லூரி மாணவி சத்யா மீது ரயில் ஏறி இறங்கியதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கிருந்த பயணிகள் கொலையாளி சதீஷை பிடிக்க முற்படுவதற்குள் அங்கிருந்து சதீஷ் தப்பிச் சென்றார்.
வழக்கு பதிவு செய்த மாம்பலம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தப்பிச்சென்ற கொலையாளியை பிடிப்பதற்காக ரயில்வே காவல்துறை சார்பில் 3 தனிப்படைகளும், மவுண்ட் காவல் மாவட்ட போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.
இதனிடைய மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் மன உளைச்சலில் இருந்த சத்யாவின் தந்தை மாணிக்கம்(47) என்பவர் மதுவில் வேதிப்பொருள் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் துரைப்பாக்கம் அருகே தனிப்படை போலீசார் கொலையாளி சதீஷை நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரின் குடும்பத்தினரும் காவல்துறையில் பணியாற்றி வந்ததால் ஒரே காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்பதும் கடந்த ஓராண்டு காலமாக சதீஷ்க்கு மது மற்றும் கஞ்சா போதைப்பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
இதனைடுத்து கல்லூரி மாணவி சத்யா தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் மூன்று முறை கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த மே மாதம் தி.நகரில் உள்ள சத்யா படிக்கும் கல்லூரிக்கு வந்து கல்லூரி வாசலில் சத்யாவின் முடியை பிடித்து அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து இவர் மீது மாம்பலம் காவல் நிலையத்திலும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும் இரண்டு புகார்கள் பதியப்பட்டன.
இருவரும் காவல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் சத்யாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் கொண்ட சதீஷ் சத்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டி நேற்று ரயில் நிலையத்திற்கு முன்னரே வந்து காத்திருந்து சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், சத்யாவை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முற்பட்டதாகவும், அதற்குள் தன்னை பிடிக்க பொதுமக்கள் வந்துவிட்டதாகவும் பொதுமக்கள் பிடித்தால் தன்னை அடிப்பார்கள் என அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சத்யா கொலை வழக்கில் கைதான சதீஷுக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…
மேலும், குப்பை வண்டியில் அடிபட்டு தற்கொலை செய்வதற்காக துரைப்பாக்கம் சென்றதாகவும் அங்கிருந்து தனது நண்பருக்கு குப்பை வண்டியில் விழுந்து சாவப்போவதாக மெசேஜ் அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து, தன் காதலை துண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த தான் இருவரும் சாக முடிவெடுத்துதான் இந்த செயலில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரிடம் என்னை அடிக்காதீங்க, என்னால் வலி தாங்க முடியாது எனவும் சதீஷ் கதறியுள்ளார்.
மொபைலிலிருந்து அவர் நண்பருக்கு மெசேஜ் செய்த போது சிக்னலை ஆய்வு செயது துரைபாக்கம் - கண்ணகி நகர் சாலையில் செல்லும் போது அவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைது செய்யப்பட்ட கொலையாளி சதீஷை சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். வருகின்ற 28ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மேஜிஸ்டேட் மோகனாம்பாள் உத்தரவிட்டதை தொடர்ந்து கொலையாளி சதீஷை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Murder, Railway Station