சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(46). இவர் சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்ன தெருவில் கிரசன்ட் சீ ஃபுட்ஸ் என்ற கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். குறிப்பாக விலை உயர்ந்த கடல் நண்டுகள், கடல் இறால்கள் ஆகியவற்றை முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டிணம், கட்டுமாவடி, மீமிசல், தொண்டி, வேதாரண்யம் போன்ற பகுதிகளில் இருந்து மாதத்திற்கு ரூபாய் 40 லட்சத்துக்கு மேல் கொள்முதல் செய்து அதனை ஆம்னி பேருந்து பார்சல் மூலமாக சென்னை வரவழைத்து சென்னையிலிருந்து சிங்கப்பூர், தாய்வான், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
அதன்படி நேற்று முன் தினம் ரூ.2.5 லட்சம் மதிப்புக்கொண்ட சுமார் 110 கிலோ எடை கொண்ட 5 கூடைகளில் சம்பா நண்டுகளை அதிராம்பட்டினத்தில் இருந்து வழக்கமாக எடுத்து வரும் ஆம்னி பேருந்தில் வரவழைத்து மண்ணடி பகுதியில் வேறு ஒரு வாகனத்திற்கு மாற்ற இறக்கி வைத்திருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதனை திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த வடக்கு கடற்கரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர் ஒருவர் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பு கொண்ட சம்பா நண்டுகளை திருடி வேறு ஒரு ஆட்டோவில் வைத்து எடுத்து செல்வது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் அந்நபர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (46) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தஞ்சாவூர் சென்ற வடக்கு கடற்கரை காவல்துறையினர் பழனிவேலை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பழனிவேல் பேராவூரணி பகுதியில் நண்டு மற்றும் இறால் ஏற்றுமதி செய்யும் கடை நடத்தி வருவது தெரியவந்தது. சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அதிராம்பட்டினம், பேராவூரணி பகுதியில் கடல் உணவுகளான நண்டுகள் மற்றும் இறால்களை மாதத்திற்கு ரூபாய் 40 லட்சத்திற்கும் மேல் கொள்முதல் செய்து வியாபாரம் செய்வதால் தன்னோடு இணைந்து வியாபாரம் செய்யுமாறு பழனிவேல் ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிச்சந்திரன் வியாபார பழக்கத்தில் நட்பு ஏற்பட்டுள்ள நபர்களிடத்தில் மட்டுமே வியாபாரம் செய்து வந்ததால் பொறாமையின் காரணமாக ரவிச்சந்திரனின் வியாபாரத்தை கெடுக்க பழனிவேல் திட்டமிட்டு வந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால், ரவிச்சந்திரன் எந்த பேருந்தின் மூலமாக கடல் உணவுகளை பார்சல் செய்கிறார்? அந்தப் பார்சல் சென்னையின் எந்த பகுதிக்கு வருகிறது? என்று பழனிவேல் கடந்த சில தினங்களாக நோட்டமிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சென்னை வந்த பழனிவேல் மண்ணடி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி நோட்டமிட்டு வந்ததும் பின்னர் திட்டமிட்டபடியே ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கடல் நண்டுகளை திருடி மூன்று ஆட்டோக்களில் கோயம்பேடு கொண்டு சென்று அங்கிருந்து தனது ஊருக்கு திருடிச் சென்று பதுக்கி வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பழனிவேலை போலீசார் சிறையில் அடைத்தனர். தன்னோடு சேர்ந்து வியாபாரம் செய்யாத பொறாமையினால் ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள கடல் நண்டுகளை திருடிய சம்பவத்தில் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யும் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.