சென்னையில் உள்ள மிகப்பழமையான பூங்காக்களில் ஒன்று ஷெனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க பூங்கா. அந்த கால மெட்ராஸின் சாட்சியாக இருக்கும் இடங்களில் ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவுக்கும் மிக முக்கிய இடமுண்டு. 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பூங்கா மெட்ரோ ரயில் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக 2011ம் ஆண்டில் மூடப்பட்டது. இப்பூங்காவில் 328 மரங்கள் இருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் 240 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பொலிவுடன் பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களுக்கு இப்பூங்கா நெருக்கமான ஒன்றாக இருந்த நிலையில் இப்பூங்கா விரைவில் திறக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இங்கு படிப்பகம், சறுக்கு பயிற்சி, குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி திரையரங்கு, மட்டைப்பந்து பயிற்சிக் கூடம், நடைப்பயிற்சி பாதை, செயற்கை நீரூற்று, இரவு நேரத்தில் பல வண்ண செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், யோகா மற்றும் தியானப் பயிற்சிக் கூடம் ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனியாகக் கூடைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காவின் நான்கு புறமும் மியாவாக்கி காடு, வாகன நிறுத்தங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அம்சங்களுடன், நவீன பொழுதுபோக்கு பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், எஞ்சியுள்ள பணிகளையும் அடுத்த ஒரு மாதத்தில் நிறைவு செய்து, மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.