சென்னையில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க மேற்கொண்ட வாகன சோதனையில் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் பணத்துடன் காரில் வந்த இருவர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தம்புசெட்டித் தெரு பகுதியில் இன்று மதியம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை மடக்கி தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரின் பின்புறம் கட்டுக் கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
அதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரில் பணத்துடன் வந்த இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட தொகை சுமார் 2 கோடி ரூபாய் என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இருவரும் ஆந்திர மாநிலத்தில் மொத்த நகை வியாபாரம் செய்து வருவதாகவும் எனவே சவுகார்பேட்டையில் நகை வாங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ஹவாலா பணமாக இருக்கும் என்கிற கோணத்தில் போலிசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர், பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணமும், பிடிபட்ட இரு நபர்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்தியாளர் : அசோக், சென்னை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.