சென்னையில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் லீசுக்கு விட்டு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உள்பட 50 க்கும் மேற்ப்பட்டவர்களை ஏமாற்றி ரூ 7கோடி வரை மோசடி செய்து. தங்கத்தில் முதலீடு செய்ததாக நூதன மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றிய நபர் நொளம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
முகப்பேரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கனகராஜ், ராமலிங்கம் என்பவருக்கு 6 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு விட்டுள்ளார். குத்தகை காலம் நிறைவுற்று வீட்டை காலி செய்ய சென்ற போது, ராமலிங்கம் வேறொருவருக்கு வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தது கனகராஜ்க்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையரகத்திலிருந்து நொளம்பூர் காவல் நிலையம் உட்பட ஒரே நபர் மீது, கோயம்பேடு, சேத்துபட்டு, தி.நகர், கே.கே நகர், அமைந்தகரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடுத்தடுத்து புகார்கள் வருவதாக அண்ணா நகர் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் வரதராஜ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ராமலிங்கத்தை தேடிவந்தனர். மேலும் அவரின் செல்போன் சிக்னலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்படி தனிப்படை போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் தப்பிச்செல்ல முயன்ற ராமலிங்கத்தை அதிரடியாக கைது செய்தனர். இதைனையடுத்து போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் கடைசியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கனகராஜின் வீட்டை லீசுக்கு விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும், கனகராஜை ஏமாற்றியது போல் அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, கோடம்பாக்கம், கோயம்பேடு, சேத்துபட்டு, தி.நகர், கே.கே நகர், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை லீசுக்கு வீடு எடுத்து, அந்த வீட்டை ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என பணம் பெற்றுக்கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.7 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் தான் ஏமாற்றிய பணத்தை வைத்து கடந்த 2 வருடமாக ஹரினா கோல்டு என்ற கம்பெனியை கோயம்பேடு பகுதியில் தொடங்கி அதன் கிளைகளாக திருநெல்வேலியில் 7 இடத்திலும், மதுரை, திருமங்கலம், கோவில்பட்டி, திருச்சியில் 2 இடத்திலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மயிலாடுதுறை, அந்தமான், நாகர்கோவில், வள்ளியூர், தூத்துக்குடி, கும்பகோணம், சிதம்பரம், கடலூர், சென்னையில் நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை ஆகிய இடங்களில் கடைகளை வாடகைக்கு எடுத்து அதில் பணியாளர்களை வைத்து நடத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.
அதில் பழைய நகைகளை கொடுத்தால் அதற்கு குறைவான பணத்தை கொடுத்து லாபம் சம்பாதித்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தான் தலைமறைவாக இருந்து வந்ததையும் ஒப்புக்கொண்டார். இதனிடையே, மோசடி மன்னன் ராமலிங்கம் நொளம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும் ராமலிங்கத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ராமலிங்கத்தை போலீசார் பாதுகாப்பாக அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தான் ஏமாற்றிய பணம் என்ன செய்தார்? வேறு யாரிடமும் கொடுத்து வைத்துள்ளார்? இல்லை பணத்தை வங்கியில் ஏதேனும் டெபாசிட் செய்துள்ளாரா? என்பது தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
செய்தியாளர் : கன்னியப்பன் - சென்னை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News