நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்ற பிற மாநிலங்களுக்கு துணிச்சல் இல்லை - திருமாவளவன்
நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்ற பிற மாநிலங்களுக்கு துணிச்சல் இல்லை - திருமாவளவன்
திருமாவளவன்
Thirumavalavan on NEET : நீட் வருவதற்கு முன்னும் மருத்துவ படிப்பிற்கு 1 கோடி செலவனது. நீட் தேர்வு வந்த பிறகும் 1 கோடி செலவாகிறது என்று திருமாவளவன் கூறினார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் டாக்டர் APJ அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் இலவச நீட் பயிற்சி மையம், டாக்டர் அம்பேத்கர் படிப்பகம், தந்தை பெரியார் நூலகம் ஆகியவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தொல் திருமாவளவன் நேரில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமிவேல், மாமன்ற குழு தலைவர் பி கே மூர்த்தி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்,” இந்தியாவில் நீட் தேர்வு வேண்டாம் என கூறும் ஒரே மாநிலம் தமிழக அரசு தான். திமுக தான். மற்ற மாநிலங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. இருந்தாலும் போராடும் குணம் இல்லை. நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்ற பிற மாநிலங்களுக்கு துணிச்சல் இல்லை.
தமிழக முதல்வர் துணிச்சல் மிக்கவராக மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது போற்றுதலுக்குரியது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் 8 கட்சிகளின் கூட்டணி உள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகளை ஒரு அணியில் கூட்டுவது கூடாத காரியம். அதை திமுக தலைவர் சாதித்து காட்டியுள்ளார். நீட் தேர்வு வைத்து மாநில அரசின் கல்வி சார்ந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கின்றது. அதுதான் அவர்களின் நோக்கம்.
தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதால் நீட் தேர்வு கொண்டு வருகிறோம் என கூறினார்கள். ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு டொனேஷன் என வாங்கி கொண்டிருந்தது தற்போது பீஸாக பெறுகிறார்கள். கருப்பு பணம் பெற்றவர்கள் தற்போது வெள்ளை பணமாக பெறுகிறார்கள். இது மாறவில்லை. நீட் வருவதற்கு முன்னும் மருத்துவ படிப்பிற்கு 1 கோடி செலவானது. நீட் தேர்வு வந்த பிறகும் 1 கோடி செலவாகிறது.
புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றப்பட்டால் திராவிட மாடல் என்றெல்லாம் பேச முடியாது. பாஜக ஒரு சராசரியான அரசியல் கட்சியல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் அணி. ஆர்.எஸ்.எஸ் , பாஜகவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அம்பேத்கர், பெரியாரை படித்தால்தான் புரிந்துகொள்ள முடியும்” என பேசினார்.
மேலும்,” அம்பேத்கரை சாதி தலைவராகவும், குல தெய்வமாகவும் மட்டுமே மக்கள் பார்த்துள்ளனர். கொள்கை ரீதியாக புரிந்துகொள்ளவில்லை. திராவிட மற்றும் மார்க்சியம் சேர்ந்ததுதான் அம்பேத்காரியம் என்பது கருத்து.
இலங்கையில் சிங்களர்கள் வெறி கொண்டு தமிழர்களை கொன்று குவித்தார்கள். இனவாதத்தை கையில் எடுத்த ராஜபக்சவுக்கு பூமராங் போல அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. கனவிலும் இப்படி நடக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள். பாஜகவின் மதவாத அரசியலை எதிர்த்து இந்தியாவிலே குரல் கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். மற்ற மாநிலங்களில் மதவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில்லை” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.