அதிமுகவின் ஒற்றை தலைமை யார் என தொடங்கிய உட்கட்சி விவகாரம், சுமார் 6 மாதங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, புதிய தீர்மானங்கள் கொண்டு வராமல் நடந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்து சில நாட்களில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அன்றைய நாளில், அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையால், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கிய சம்பவங்களும் அரங்கேறின. இது தொடர்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் சென்று, மேல்முறையீடு காரணமாக, தற்போது உச்ச நீதிமன்றம் வரை நீண்டிருக்கிறது அதிமுகவின் உள்கட்சி விவகாரம்.
இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் இதுவரைக்கும் மாறி மாறி புதிய நிர்வாகிகளை நியமித்து வரும் நிலையில், கட்சியின் பெருவாரியான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய நபர்களுக்கு மாவட்ட வாரியாக, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகிறார் ஓ.பி.எஸ்.
இந்த நிலையில்தான் இன்று மாவட்டச் செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தலைமை யுத்தம் தொடங்கிய பிறகு, ஓபிஎஸ் தரப்பில் மிக முக்கியமான கூட்டமாக பார்க்கப்படுகிறது.
Also Read : சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த கூட்டத்தின்போது, ஓ.பி.எஸ். தலைமையில் இயங்கும் அதிமுக, வரும் நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்று பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ”2023 பிப்ரவரி மாதத்தில் வரும் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவும், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் அதிமுக வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது” என தெரிவித்தார்.
Also see... சூறாவளிக்காற்று எச்சரிக்கை.. மழைக்கு அலெர்ட்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பு!
இதனிடையே, சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் மாறி மாறி கூட்டம் நடத்துவதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.