தனியாக ஹோட்டல் அறை எடுத்து தங்கியிருந்த இளம்பெண்ணின் வாட்ஸ் ஆப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய ஹோட்டல் முன்னாள் ஊழியரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை பெருநகரம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய இளம்பெண் காவல்நிலையத்தை நாடி புகார் அளித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை தங்கி உள்ளார். தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அப்பெண், வீட்டில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டதால், அந்த ஹோட்டலில் தனியாக தங்க வேண்டிய இருந்தது.இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி அறிமுகமில்லாத ஒரு எண்ணில் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மெசேஜ் வந்துள்ளது.
சிறிது நேரம் கடந்த நிலையில் அதே எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர் மீண்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் நீங்கள் யாரென்றே எனக்கு தெரியாது, மீண்டும் கால் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.மேலும், அடையாளம் தெரியாத அந்த செல்போன் எண்ணை அந்தப்பெண் பிளாக் செய்துள்ளார்.
3 மாதங்கள் கடந்த நிலையில் மற்றொரு எண்ணில் இருந்து அப்பெண்ணிற்கு வாட்ஸ்-அப் மெசேஜ் வந்துள்ளது.தன்னை தொந்தரவு செய்த நபரின் விவரங்களை அறிந்து கொள்ள நினைத்த பெண், அவரது எண்ணின் வாட்ஸ்அப் டிபி புகைப்படத்தை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.வாட்ஸ் அப் போட்டோவை வைத்து பார்த்ததில், 3 மாதங்களுக்கு முன்பு தொல்லை செய்த அதே நபர் மீண்டும் அட்டகாசத்தில் இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
பெண் தனியாக ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது அவருக்கு உணவு கொடுக்க ரூம் பாயாக வந்தவர்தான் தொல்லை செய்ததும் உறுதியானது.உடனே அந்த பெண் ஹோட்டலுக்கு தொடர்பு கொண்டு தனக்கு தொல்லை கொடுத்துவரும் ரூம் பாய் குறித்து கேட்டுள்ளார்.ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் பேசிய நபர், சில மாதங்களுக்கு முன்பே, ரூம் பாயாக பணியாற்றியவர் பணியை விட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
ஹோட்டல் அறையில் தங்கிருந்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ரூம் பாய்க்கு எப்படி சென்றது என கேட்க, ஹோட்டல் நிர்வாகத்தினர் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது.ஒரு கட்டத்தில் எல்லை மீறியதால், பாண்டிபஜார் காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார்.சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்து விசாரித்ததில், நெல்லையைச் சேர்ந்த வினோ சிங் என்பவர் இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
வினோ சிங்கிடம் நடத்திய விசாரணையில், 2 ஆண்டுகளாக தனியார் ஹோட்டலில் பணியாற்றியதாகவும், சமையல் அறை பதிவுகளிலிருந்து இளம்பெண் குறித்த தரவுகளை திருடியதாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, பெண் வன்கொடுமை, மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு வினோ சிங்கை சிறையில் அடைத்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தனியார் ஹோட்டல் பொது மேலாளர் வெங்கடேஷ், தங்களது வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹோட்டலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர், வேறு நபர்கள் மூலம் பெண்ணின் செல்போனை பெற்றிருக்கலாம் என ஹோட்டல் பொது மேலாளர் கூறியுள்ளார்.
தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களைத்தாண்டி, பிறந்தநாள் விபரங்களை பகிர்ந்த கருப்பு ஆடு யார் என்பதை கண்டறிந்து ஹோட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News