ஹோம் /நியூஸ் /சென்னை /

மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு.. கமல்ஹாசன் திட்டம்!

மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு.. கமல்ஹாசன் திட்டம்!

கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு

கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு

"நான் A சொன்னால் A சொல்லுங்கள், B சொன்னால் B சொல்லுங்கள், C சொன்னால் C சொல்லுங்கள். உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன்"

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அண்மையில் பங்கேற்றார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நடைபயணத்தில் பங்கேற்ற தனது கட்சி நிர்வாகிகளை கமல்ஹாசன் நேரில் அழைத்து,  சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற விழாவில் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “பா.ஜ.க மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அதனை நாம் எதிர்க்க வேண்டும். அதன் காரணமாகவே நாம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடோ நடை பயணத்தில் பங்கேற்றோம்.

நாம் மதத்திற்கு எதிரான அரசியலை தடுக்க வேண்டும், ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் பாரத் ஜோடோ அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நான் ‘ஏ’ சொன்னால் ‘ஏ’ சொல்லுங்கள், ‘ பி’ சொன்னால் ‘ பி’ சொல்லுங்கள், ‘சி’ சொன்னால்  ‘சி’ சொல்லுங்கள். உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன். எனவே, தலைமை கட்டளைகளை, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாரா முகத்தோடு இருக்க மாட்டேன்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

நன்றாக பேச வருபவர்கள் அவர்களுக்கு கீழ் 10 நபர்களை தயார் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் நல்லது கெட்டது அனைத்தையும் நான் பார்த்துகொண்டு  உள்ளேன்.  உங்களுக்கு பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து இங்கு அரசியல் செய்ய முடியாது. ஏன் என்றால் இது தமிழ்நாடு.

அண்ணா என்பது அவர் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு உறவு. சாமானியர்களின் நலனை யார் பேசுகிறார்களோ அவர்கள் பின் மக்கள் செல்வார்கள். அந்த நலனை நான் தேடி கொண்டுள்ளேன். கட்சியை அடுத்த கட்டத்திற்கு நோக்கி நகர்த்துகிறோம். இந்தியா சிதைந்து விட கூடாது, என்பதற்காக நடப்பதுதான் பாரத் ஜோடோ நடைபயணம்” என தெரிவித்தார்.

மேலும், “தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் வந்துள்ளது. இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதை புவி என மாற்றி கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திபின்போது பேசிய அவர், “நிர்வாகிகளை நான் இன்று சந்தித்து பேசிய ஒரே காரணம் என்னுடைய ஒரு குரல் கேட்டதும் அனைவரும் டெல்லி வந்தார்கள்.

ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் ஜல்லிக்கட்டுகாக நடத்திய போராட்டம் நான் இன்னும் மறக்கவில்லை. அதே இடத்தில் நடத்த முடியாது பல சிக்கல் இருக்கிறது. நகரத்தில் இருப்பவர்களுக்கு ஜல்லிக்கட்டு புரிய வேண்டும் அதற்காக சென்னையில் ஜல்லிகட்டு நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Jallikattu, Kamal Haasan, Makkal Needhi Maiam