சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய கணக்கு குழு தலைவர் தனசேகரன், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 348 இ டாய்லெட்கள் கட்டுவதற்கு , 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றன. தற்போது அந்த இ டாய்லெட்கள் எங்கேயும் காணவில்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடு மற்றும் முறையாக பராமரிப்பு இல்லாததால், கட்டப்பட்ட சில இ டாய்லெட்களும் சீர்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் ஆங்காங்கே உள்ளன. கடந்த ஆட்சியில் ஸ்வச் பாரத் நிதியை கொள்ளை அடிக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இ டாய்லெட்கள் நிலை என்ன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து அடுத்த மாமன்றக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீண்டும் ஒப்பந்தத்தில் பங்கேற்காத வகையில்கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் 2014 ஆண்டு முதல் இ டாய்லெட்கள் 144 இடங்களில் அமைக்கப்பட்டது. தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இ டாய்லெட்களை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து டாய்லெட்கள் சரிசெய்ய அறிவுறுத்தியதால் 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிதாக கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் 358 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் கிடைக்கப்பெறும் இடங்களில் எல்லாம் கட்டமைக்க திட்டமும் உள்ளது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக சென்னையில் கழிப்பறைகள் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai