ஹோம் /நியூஸ் /சென்னை /

பத்திரிகையாளர்களை குரங்குகள் என்பதா? - அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம்

பத்திரிகையாளர்களை குரங்குகள் என்பதா? - அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம்

செந்தில் பாலாஜி. அண்ணாமலை

செந்தில் பாலாஜி. அண்ணாமலை

Minister Senthil Balaji | சென்னை பத்திரிகையாளர் மன்றமும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

  தீபாவளி பண்டியையொட்டி தமிழ்நாட்டில் 708 கோடி ருபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.  இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவு வெளியிட்டார்.

  அதில்,  “தீபாவளிக்கு முன்பாக டாஸ்மாக் இலக்கு என எதையும் நிர்ணயிக்கவில்லை. தீபாவளிக்கு பிந்தைய மதுபான விற்பனை குறித்த விவரங்கள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கே வந்து சேரவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  இதையும் படிங்க : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  மேலும், “தவறான தகவல் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம் மற்றும் செய்தியாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.   அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்” என பதிவிட்டிருந்தார்.

  இதையடுத்து, இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது” என கூறியிருந்தார். இப்படி அமைச்சர் செந்தில் பாலாஜியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மாறி மாறி ட்விட்டரில் வார்த்தை போரை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில், தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்ப முயன்ற செய்தியாளர்களை பார்த்து அவர்,  “மரத்து மேல குரங்கு தாவுவது போல ஏன் இப்படி தாவுகிறீர்கள். ஊர்ல நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என ஒருமையில் பேசினார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் படிங்க : பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்... குஷ்பூ முறையீடு... மன்னிப்புக் கேட்ட கனிமொழி

  இந்நிலையில். பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த செயலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் “மேன்மக்கள் என்றும் மேன்மக்களே” என்றும் தெரிவித்துள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Annamalai, BJP, DMK, Senthil Balaji, Tamilnadu