சென்னை மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் பணிகள் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. பருவ மழைக்கு பின் ஜனவரி மாதத்தில் சாலை போடும் பணிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது.
மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 1,022 சாலைகள் பழுதடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், “சிங்கார சென்னை 2.0 திட்டத்திப் கீழ், 40 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் பழுதடைந்த 362 சாலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். ஒட்டுமொத்தமாக 107 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது”என்றார்.
இந்த நிதியாண்டில் சாலை பணிகளுக்கு, 125 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், “முதற்கட்டமாக பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் போட டெண்டர் போடப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும். ஏற்கனவே தொடங்கப்பட்டு மழை காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும்,
மண்டல வாரியாக பழுதடைந்துள்ள சாலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு தேவைப்படும் 500 கோடி ரூபாயை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அதேபோல், வளசரவாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருந்தாலும் குடிநீர் வாரியம் பணிகளை முடித்து மாநகராட்சியிடம் ஒப்படைத்த பின்தான் அங்கு சாலைகள் போடும் பணி தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, Mayor Priya, Priya Rajan, Road Safety