சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.
சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் சினேகன். சமீபத்தில் தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு அறக்கட்டளையை பதிவு செய்து நடத்தி வருகிறேன். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை செய்து வருகிறேன். இந்த நிலையில் சமீபமாக இணையதளங்களில் எனது பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூலில் ஈடுபடுவதாக வருமான வரித்துறை மூலம் எனக்கு தகவல் வந்தது.
நான் எனது மேலாளரை அனுப்பி விசாரித்தபோது, அவர் போலியான முகவரி, இணையதளத்தை கொடுத்து என்னுடைய அறக்கட்டளையை இயக்குவது தெரியவந்தது. எனவே, இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது அறக்கட்டளையில் இயங்கும் போலி இணையதளத்தை முடக்க வேண்டும்’ இவ்வாறு சினேகன் தெரிவித்தார்.
மத்திய அரசு அங்கீகாரம் பெற்று தனது சொந்த செலவில் சினேகம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், தனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சினேகன் கூறினார். மேலும், நடிகை ஜெயலட்சுமியின் புகைப்படத்தை பயன்படுத்தி யாரேனும் மோசடி செய்கின்றனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.