சென்னையில் தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் சென்னை உட்பட இந்தியா முழுவதும் இயங்கி வரும் பிரபல ஃபோட்டோ நிறுவனமான கோனிகா கலர் லேபின் உரிமையாளர் ஆவார். இவரது மனைவி அருணா தேவி. கடந்த 20 வருடங்களாக சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தனது மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ் குமார் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டு, 28ஆம் தேதி விருகம்பாக்கம் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ மற்றும் லாக்கரில் இருந்த ரூ.66 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள், 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.13.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அதிர்ச்சியில் உறைந்த சந்தோஷ்குமார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
கொள்ளையர்கள், வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துவிட்டு டி.வி.ஆர் கருவிகளை எடுத்து சென்றதால் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி கொள்ளையர்களின் அடையாளங்களை ஆய்வு செய்து போலிசார் தேடி வந்தனர்.
சிக்கியது எப்படி?
கடந்த 14 நாட்களாக போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தபோதும் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜே.ஜே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி ராம்குமார் என்பவரின் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23 சவரன் நகை மற்றும் 2 ஆயிரம் பணம் கொள்ளை போன வழக்கில் திருமங்கலம் தனிப்படை போலீசார் கொள்ளையனை திருநெல்வேலி பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசாரிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்து (32) என்பதும் இவர் மீது சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட முத்துவிடம் நடத்திய தொடர் விசாரணையில், விருகம்பாக்கம் பகுதியில் கோனிகா கலர் லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார் என்பவரின் வீட்டில் 66 சவரன் தங்க நகைகள், 80 கிலோ வெள்ளி, 13.5 லட்சம் பணம் கொள்ளையடித்தது இவர் தான் என்பதும், அந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த திருமங்கலம் தனிப்படை போலீசார், இது குறித்து விருகம்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் கொள்ளையன் முத்துவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அம்பத்தூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த முத்து, இரவு நேரங்களில் ஆள் இல்லாத தனி வீட்டை நோட்டமிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்து பின் அந்த வீட்டை கவ்பார் மூலமாக கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை முத்து கொள்ளையடித்து வந்துள்ளார்.
குறிப்பாக கொள்ளையடிப்பதற்கு முன்பும், பின்பும் போலீசார் நெருங்காதபடி VPN ஆப்பை பயன்படுத்தி முத்து போன் பேசி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையடித்த நகைகளை திருமங்கலம் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கொள்ளையன் முத்து கொடுத்த தகவலின் அடிப்படையில் 30 சவரன் நகைகள் உள்ளிட்ட 65% பொருட்களை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க பயன்படுத்திய 8 செல்போன்களை கொள்ளையன் முத்துவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவருக்கு உதவியாக வேறு யாரேனும் உள்ளார்களா? அல்லது தனி ஒருவனாக சென்று கொள்ளையடித்து வந்துள்ளாரா? எங்கெங்கெல்லாம் கொள்ளையடித்துள்ளார் என்ற கோணங்களில் விருகம்பாக்கம் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Robbery