சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹாக் செய்து டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் நடத்தி வந்த கேரள வாலிபர் கைதான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னையில் கடந்த பதினைந்து நாட்களில் 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 10,000 முதல் 15,000 அழைப்புகளை செய்யப்பட்டுள்ளதை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட சென்னை தொலைபேசியின் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று திடீர் சோதனை நடத்தினர்.காவல் துறையினரின் உதவியுடன் சோதனை செய்த போது, சம்பந்தப்பட்ட வீட்டில் ஏழு சிம் பெட்டிகளை காவல் துறையினர் மீட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்டியும் 32 சிம் கார்டுகளை செயலாக்கும் திறன் கொண்டது என தெரியவந்துள்ளது. இந்த வாடகை வீட்டில் வசிக்கும் நபர் சட்டவிரோதமாக டவரில் இருந்து சிக்னல் ஹாக் செய்து டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் வாடகை வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 35-வயதான நாபல் (Naufal) என்பது தெரிய வந்துள்ளது. கானத்தூர் நைனார் குப்பம் பகுதியில் 7.500 ரூபாயில் வாடகை வீடு ஒன்று எடுத்து அதில் தங்கி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நபர் பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களை ஏமாற்றி அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளார். இதற்காக 224 வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக சிம் கார்டுகளை வாங்கியுள்ளார், அதனை பிரத்யேக கருவிகளில் இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு நெட்வொர்க்கை உருவாக்கி அவர்களுக்கு ஒரு பிரத்யேக மொபைல் எண்ணை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நெட்வொர்க்கில் பதிவு செய்து வழங்கியுள்ளார், அவர் பதிவு செய்த நம்பர்கள் அனைத்தும் போலி ஆதார் அட்டை மற்றும் போலி முகவரிச் சான்றிதழை பயன்படுத்தி வாங்கப்பட்டது தெரியவந்தது.
இதன் மூலம் பேசுபவர்கள் யார் யாரிடம் பேசுகிறார்கள் என்ற விவரம் செல்போன் நெட்வோர்க் நிறுவனத்தில் பதிவாகாதபடி நுனுக்கமாக செய்துள்ளனர். மேலும் வெளி நாடுகளில் வசிப்பவர்கள் ஒரு பிரத்யேக கருவியை பயன்படுத்தி வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) அழைப்புகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் தனது வீட்டிலேயே சிறிய அளவிலான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உருவாக்கி அதன் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளார். இப்படி ரூட்டரை வைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நெட்வெர்க்கை திருடி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொலை தொடர்பில் ரகசியம் காக்க இதுபோன்ற நாச வேலைகளில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகத்திலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது. எதற்காக இப்படி ஒரு மோசடி செயலில் ஈடுபட்டனர் என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான நாபல் மீது வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நெட்வொர்க்கை கேரளாவில் இருந்து இயக்கி வரும் முக்கிய குற்றவாளியான அனீஸ் உள்ளிட்ட இருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.