சென்னை மாநகரில் விபத்துகளை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் போக்குவரத்து விதிகளை மீறி அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை தங்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டுச் செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை பெருநகர் முழுவதும் உள்ள 255-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஜூன் 20-ம் தேதி சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு விழிப்புணர்வின் போது, மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கல்வி கற்பிக்கப்பட்டது மற்றும் போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுமாறு பெற்றோர்களை வற்புறுத்துவதற்கு குழந்தைகள் ஊக்குவிக்கப்பட்டனர் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை கண்டிப்பாக பின்பற்றவும் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி பேருந்துகளின் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள், 2012ஐ பின்பற்றி பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களை எவ்வாறு இயக்குவது குறித்த விழிப்புணர்வை சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்படுத்தப்படுத்தியது.
இன்ஸ்டாகிராமில் பிளான்... 4 நாட்களில் 18 மொபைல் பறிப்பு.. மூளையாக செயல்பட்ட 16 வயது சிறுமி
இதைத் தொடர்ந்து 21.06.2022 அன்று சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு வாகன தணிக்கையின் போது 983 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 501 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றதாக 248 வழக்குகளும், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது தொடர்பாக 67 வழக்குகளும், அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்றதாக 134 ஆட்டோக்கள் மீதும் மொத்தம் 983 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து வாகன ஓட்டிகளும் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லும் போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றி குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து ஒழுக்கத்தை பின் பற்றுவதில் முன்னுதாரணமாக திகழுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.