முகப்பு /செய்தி /சென்னை / 'சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு' - தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த நீதிமன்றம்!

'சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு' - தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த நீதிமன்றம்!

ஆர்.எஸ்.எஸ் பேரணி

ஆர்.எஸ்.எஸ் பேரணி

கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் - நீதிபதிகள் அறிவுரை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடுக்கப்பட்ட 45 மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அதில் வாதிட்ட ஆர்.எஸ்.எஸ் தரப்பு, “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால் இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான்” என தெரிவித்தனர்.

மேலும் “ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ்.தரப்பில் வலியுறுத்தப்பட்டது

தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில், “சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது. எனவே இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும் உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கடுமையான ஒழுங்குடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

First published:

Tags: Chennai High court, RSS, Tamilnadu police