Home /News /chennai /

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட விவகாரம்; மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட விவகாரம்; மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

நாட்டா (NATA) தகுதித் தேர்வு தேவையில்லை என ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்த பிறகும், அந்த தகுதி அவசியம் எனக் கூறி, பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
பி. ஆர்க் படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஆர்கிடெக்சர் கவுன்சில் 2008ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் பல மாநிலங்கள், நாட்டா தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என கூறி வந்தன. இந்நிலையில், ஆர்கிடெக்சர் கவுன்சில் 2017, ஜூன் 15ம் தேதி வெளியிட்ட விளக்க சுற்றறிக்கையில், நாட்டா தேர்வு கட்டாயம் இல்லை என்றும், JEE உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் பி.ஆர்க். படிப்பில் சேர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 2017-18ம் கல்வியாண்டில் பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்புகளில் நாட்டா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறி, JEE தேர்வில் 390 மதிப்பெண்களுக்கு 226 எடுத்த அம்ருதா என்கிற மாணவி பி.ஆர்க். படிப்பிற்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாட்டா தேர்வு கட்டாயமில்லை என்ற பிறகும், விண்ணப்பத்தை நிராகரித்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க 2017ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நாட்டா தேவையில்லை என்று 2017ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், நாட்டா தகுதி தேர்வு அவசியம் என ஜூன் 25ம் தேதி மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டது ஆர்கிடெக்சர் கவுன்சில் உத்தரவை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் கூட, நாட்டா கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு 2008ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், JEE உள்ளிட்ட தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் நாட்டா தேர்வில் தகுதி பெறவில்லை என கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, ரூ.10 லட்சம் இழப்பீடும், ரூ. 1 லட்சம் வழக்கு செலவு தொகையாகவும் சேர்த்து 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: கனல் கண்ணன் ஜாமீன் நிபந்தனையை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பில் இருக்கும் பொறுப்பற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளால், நம் இளைஞர்களின் வாழ்வு எப்படி பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை இந்த வழக்கு படம்பிடித்து காட்டுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கல்வி என்பது வாழ்வாதாரத்திற்கு தேவையான தகுதியை வழங்குவதற்கு மட்டும் அல்ல, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதும் தான் என குறிப்பிட்டார்.

சமீப நாட்களில் கல்வி வணிகமயமானது மட்டும் அல்லாமல், தகுதி இல்லாதவர்களின் கைகளிலும், அறிவுசார் ஆணவகாரர்களின் கைகளிலும் விழுந்துவிட்டதாக வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். பெயருக்கு பின்னால் கல்வி தகுதியை பெற்றிருக்கும் இந்த ஆணவக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால், மாணவர்களின் வாழ்க்கை வீணாவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai High court, Education, Student

அடுத்த செய்தி