சென்னை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் சிறிய நகரங்களுக்கு விமானத்தில் செல்லும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிக தேவை மற்றும் செயல்பாட்டு செலவு அதிகரிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறிய நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கும் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி, போபால், விசாகப்பட்டினம், சூரத், பாட்னா, சண்டிகர் மற்றும் வேறு சில இடங்களுக்கு நேரடி விமானங்களில் ஒரு வழிக் கட்டணம் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் கோடை விடுமுறைகள் முடிய தொடங்கிவிட்டாலும், பயணத்திற்கு ரூ 10 ஆயிரம் என நிர்ணயமாகியுள்ளது. டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், பல சிறிய நகரங்களுக்கு ஒரு நாளைக்கு 1 முதல் 2 நேரடி விமானங்களை மட்டுமே விமான நிறுவனங்கள் இயக்குகின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்தில், போபாலுக்கு ரூபாய் 7 ஆயிரம், ராஞ்சிக்கு ரூபாய் 8,300, சண்டிகருக்கு ரூபாய் 10 ஆயிரம், சூரத்துக்கு ரூபாய் 7,700, அகமதாபாத்துக்கு ரூபாய் 9 ஆயிரம், பாட்னாவுக்கு ரூபாய் 8,900 என விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் தேவை அதிகமாக இருக்கும் போது அதிகபட்ச வருவாயை ஈட்டுவதற்காக அதிக அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெரும்பாலான வழித்தடங்களில் சுமை காரணி நிச்சயமாக சராசரியை விட அதிகமாக உள்ளது. ஏனெனில், அது சந்தையின் கீழ் வரும் ஒன்று. ஆனால், அதிக எரிபொருள் விலையால் விமான நிறுவனங்களும் செலவுகளை அதிகரித்து வருகின்றன’ என அவர் தெரிவித்தார். கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக சென்னையில் ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் (ATF) விலை 1.27 லட்சமாக உள்ளது.
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரன் பாலன் கூறுகையில், உள்நாட்டுப் பயணங்கள் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான வழித்தடங்களில் விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ‘கோடை விடுமுறை என்பதால் தேவை அதிகம். பிரபலமான வெளிநாட்டு இடங்களுக்கு விசா பெறுவதற்கு எடுக்கும் நேரம் காரணமாக சமீபகாலமாக பலரும் விடுமுறையை உள்நாட்டில் கழிக்கத் தொடங்கிவிட்டனர். அதே நேரத்தில், கடைசி நிமிட மாற்றங்களைச் செய்வது கடினமாகிவிட்டது. ஸ்ரீநகரில் இருந்து சென்னைக்கு ஒரு வழி பயணக் கட்டணம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பதிவு செய்தபோது 30 ஆயிரமாக இருந்தது. ஆனால், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது’ என்று அவர் கூறினார்.
விமானக் கட்டணத்தில் ஒரு வரம்பை உறுதி செய்யக்கூடிய பிராந்திய இணைப்புத் திட்டம் (Regional Connectivity Scheme), கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு கைவிடப்பட்டுவிட்டது. சென்னை-சேலம் விமான சேவையும் இன்னும் தொடங்கப்படவில்லை. அது மட்டுமின்றி, சர்வதேச பயணிகளால் சென்னையிலிருந்து பெருநகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் விலை அதிகமானது.
இவ்வாறான கட்டுப்பாடற்ற கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Chennai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.