ஹோம் /நியூஸ் /சென்னை /

கால் வலிக்காக மாணவி பிரியா சென்றது முதல்... உயிரை பறித்த அறுவை சிகிச்சை வரை... நடந்தது என்ன?

கால் வலிக்காக மாணவி பிரியா சென்றது முதல்... உயிரை பறித்த அறுவை சிகிச்சை வரை... நடந்தது என்ன?

கால்பந்து வீராங்கனை பிரியா

கால்பந்து வீராங்கனை பிரியா

Special Story : விளையாட்டு வீரர்கள் எளிதாக கடந்துபோகும் தசைநார் கிழிவு, ஒரு இளம் உயிரை பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கால் வலிக்காக மருத்துவமனைக்கு சென்று உயிரை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

  வலது காலில் தசை கிழிவு :

  தனது 18-வது பிறந்த தினத்தில் வியாசர்பாடி டான்பாஸ்கோ கல்லூரி பயிற்சிக்கு வந்த பிரியாவுக்கு விளையாடும்போது வலது கால் முட்டியில் தசை கிழிவு ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் பெரவள்ளூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 7-ம் தேதி அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  அன்றைய தினமே வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார் பிரியா. மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகள் கொடுத்தும் கால் வலிப்பதாக பிரியா கூறியதால் 8-ம் தேதி காலையிலேயே குடும்பத்தினர் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

  அதிர்ச்சியளித்த மருத்துவர்கள் :

  அங்கு கால் கட்டுகளை பிரித்துப் பார்த்தபோது மருத்துவர்கள் ரத்த ஓட்டம் முழங்காலுக்கு கீழே செல்லவில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்து காலை உடனடியாக எடுத்தால் மட்டுமே பிரியா பிழைப்பார் எனவும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.

  இதனால் செய்வது அறியாது திகைத்துப் போன குடும்பத்தினர் காலை வெட்டி எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் புதன்கிழமை மதியம் பிரியாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  இதையும் படிங்க : ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

  ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிக்கு கீழ் முழுவதையும் மருத்துவர்கள் வெட்டி எடுத்துள்ளனர். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த பிரியாவுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக டயாலிசிஸ் செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  அவசர சிகிச்சை :

  இதனைத்தொடர்ந்து திங்கள் கிழமை இரவு பிரியா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பிரியாவின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் என முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

  அறுவைச் சிகிச்சை செய்த தினத்தில், இரவு முழுவதும் பிரியா வலியால் துடித்ததாகவும், அப்போது மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளை கொடுத்து அவரை தூங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இரு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் திங்கள் கிழமை, செயலிழந்த தசைநாறுகளை அகற்ற மீண்டும் திருத்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

  செயற்கை சுவாசம் :

  அப்போது முதல் பிரியாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. தசை கிழிவு சிறுநீரில் மயோகுளோபின் எனப்படும் புரதம் மற்றும் கிரியேட்டின் அளவை உயர்த்தியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவே பிரியாவின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பிரிந்த உயிர் :

  பிரியாவின் ரத்த அழுத்தம் குறைந்தாகவும் இரவு முழுவதும் செய்யப்பட்ட டயாலிசிஸ்சும் பலன் அளிக்கல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். விளையாட்டு வீரர்கள் எளிதாக கடந்துபோகும் தசைநார் கிழிவு, ஒரு இளம் உயிரை பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கதறி அழுத தோழிகள் :

  மாணவி பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக வெளியே கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது தோழிகள் அனைவருமே பிரியாவின் உடலை சூழ்ந்துகொண்டு கதறி அழுதபடி, “எழுந்திருடி பிரியா, எழுந்திருடி பிரியா” என தலையில் அடித்துக்கொண்டு அழுதனர். மேலும் பிரியாவின் பயிற்சியாளர் ஜோயல் கண்ணீர் விட்டு அழுதார்.

  உருக வைக்கும் வாட்ஸ்அப் பதிவு :

  முன்னதாக மாணவி உயிரிழப்பதற்கு முதல் நாள் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலாகியது. அதில், “அனைத்து நண்பர்கள், உறவினர்களுக்கும், நான் சீக்கிரமாகவே ரெடி ஆகி மீண்டு வருவேன். அதனால் யாரும் கவலை படாதீர்கள். மாஸா வருவேன். எனது விளையாட்டு என்னை விட்டு எப்போதும் போகாது. நீங்கள் நான் வருவேனு நம்பிக்கையோடு காத்திருங்கள்” என அத்தனை தன்னம்பிக்கையாக பதிவிட்டிருந்தார்.

  அமைச்சர் விளக்கம் :

  இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாணவிக்கு நல்ல முறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் கூட மருத்துவர்களின் கவனகுறைவால் காலில் போட்ட கட்டு மிக அழுத்தமாகி ரத்த ஓட்டத்தை பாதித்துள்ளது.

  ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பதால், ரத்த நாளங்கள் பழுதாகி அவதிக்குள்ளாகியுள்ளார். பிறகு தான் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  முதலமைச்சரின் கவனத்திற்கு சென்ற பிறகு வீராங்கனை பிரியா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தான் இருந்து வந்துள்ளார். ஆனாலும், இந்த ரத்தநாளங்கள் பழுதாகியதால், மேல் சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதயம் பாதிப்பு என ஒவ்வொன்றாக செயலிழந்து மாணவி உயிரிழந்துள்ளார்" என கூறினார்.

  பேட்டரி கால்களுக்கு அறிவுறுத்தல் :

  மேலும், மாணவி பிரியா சரியானவுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் பேட்டரி கால்களை வாங்கித்தர அறிவுறுத்தியிருந்தோம். ஆனால் அதற்குள் அசம்பாவிதம் நடந்துள்ளது. மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

  மருத்துவர்கள் சஸ்பெண்ட் :

  கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததற்காக பெரியார் புறநகர் மருத்துவமனை எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பால்ராம் சங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் சோமசுந்தரம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

  இந்நிலையில், பிரியா நேற்று உயிரிழந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

  பாஜக அண்ணாமலை கோரிக்கை :

  இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், சகோதரி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தினார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Tamilnadu