Home /News /chennai /

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் 30க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பல லட்சம் மோசடி.. பலே ஆசாமியின் பகீர் வாக்குமூலம்..

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் 30க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பல லட்சம் மோசடி.. பலே ஆசாமியின் பகீர் வாக்குமூலம்..

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் மோசடி.. பலே ஆசாமியின் பகீர் வாக்குமூலம்..

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் மோசடி.. பலே ஆசாமியின் பகீர் வாக்குமூலம்..

மாடலிங் பெண்களோடு உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என மோசடியில் ஈடுப்பட்டவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அடையாறு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள், இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடமிருந்து ரூ.12 லட்சம் மோசடி செய்ததாகவும், இதே போல பல பெண்களிடம் அவர் ஏமாற்றி வருவதாகவும் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார். மேலும், அந்த நபர் மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக பழக்கமாகி பின்னர் தன்னிடம் மொபைல் மூலமாக மட்டுமே பேசி வந்ததாகவும், இதுவரை நேரில் சந்தித்ததில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அடையாறு போலீசார், காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இளம்பெண் பணம் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் இளைஞரின் மொபைல் நம்பரை ஆய்வு செய்து மோசடி நபரை அடையாளம் கண்டனர்.

மேலும் அந்த மோசடி நபர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதும் போலீசருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பிடிபட்ட அந்த மோசடி நபர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜ் (28) என்பது தெரியவந்தது. பி.காம் பட்டதாரியான இவர் மேட்ரிமோனியில் இணையதளத்தில் தன்னை மருத்துவர், இன்ஜினியர், தொழிலதிபர் என பதிவிட்டு பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மாடலிங் செய்யும் ஆண்களின் புகைப்படத்தை எடுத்து அந்த புகைப்படத்தை டாக்டர் போன்றும் தொழிலதிபர் போன்றும் போட்டோஷாப்பில் உடை அணிவித்து ஸ்டைலான பெயரில் தனது மாத சம்பளம் ரூ.5 லட்சம் என மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்து அதன் மூலம் இளம்பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக மேட்ரிமோனியலில் திருமணத்துக்காக பதிவு செய்திருக்கும் பெண்கள் மற்றும் பெண்களின் பெற்றோர்களிடம் தன்னை கார்த்திக் ராஜாவின் அப்பா என நம்பவைத்து பேசிவந்துள்ளார். பின்னர் தனது மகன் உங்களை தொடர்பு கொள்வார் எனக்கூறி கார்த்திக் ராஜாவே அந்த இளம்பெண்களிடம் பேசுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இளம்பெண்களிடம் பேசி காதல் வயப்படுத்தி அடுத்த வாரம் பெண் பார்க்க வருவதாக கூறி, சரியாக பெண்பார்க்க வருவதாக அறிவித்த தேதிக்கு முந்தைய நாள் இளம்பெண் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு கால் செய்யும் கார்த்திக் ராஜா தனது அப்பா கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக பணம் வேண்டும் சில தினங்களில் தந்து விடுவதாக கூறி லட்சங்களில் பணம் பறித்து வந்துள்ளார்.

இதே முறையில் தான் அடையாறை சேர்ந்த தொழிலதிபரின் மகளிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி ரூ.12 லட்சம் பணம் பறித்துள்ளார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் மேட்ரிமோனியல் இணையதளம் மூலமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி சுமார் ரூ. 65 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

மோசடி செய்த பணத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற இடங்களில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் அறை எடுத்து டேட்டிங் ஆப்கள் மூலம் மாடலிங் அழகிகளுடன் வெளிநாட்டு மதுவகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

பெண் மாடல்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனவும் அதனை நிறைவேற்றவே இதுபோன்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் ராஜா பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜாவிடமிருந்து ஐந்து விலை உயர்ந்த ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஐபோனின் விலையும் ரூ.1.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஏடிஎம் கார்டுகள், மருத்துவர் ஆடைகள், ஸ்டெத்தஸ்கோப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜாவிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai, Matrimony

அடுத்த செய்தி