சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்றதால், மேல் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
உயிரை காப்பாற்ற வழியில்லாமல், வேதனையோடு கால்பந்து வீராங்கனையின் கால்களை அகற்ற சம்மதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், இரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவர், சிறுநீரகவியல் துறை நிபுணர், பொது மருத்துவ சிகிச்சை நிபுணர் அடங்கிய மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மருத்துவமனையின் அலட்சியபோக்கே காரணம் என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவியின் சடலத்தை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Death, Ma subramanian, Rajiv gandhi Hospital