எதிர்பாராத மழை காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக வெளியே வராததாலும் சென்னையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கடந்த ஆண்டை விட 30% கூடதலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 837 படுக்கைகள் உள்ளன. அதில் சுமார் 300 படுக்கைகள் காய்ச்சலுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 129 படுக்கைகள் நிரம்பியுள்ளன. இது கடந்த மாதம் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட 30% அதிகமாகும்.
இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி கூறுகையில், அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய மழை தற்போதே தொடங்கியதால் காய்ச்சல் பாதிப்புகள் திடீரென அதிகமாகி வருவதாக தெரிவித்தார். இதில் பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு 5 நாட்கள் வரை காய்ச்சல் நீடிப்பதாகவும், முதல் இரண்டு நாட்கள் அதிக காய்ச்சல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதே போன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தை மருத்துவமனையில் உள்ள 180 படுக்கைகளில் கிட்டத்தட்ட அனைத்து படுக்கைகளுமே காய்ச்சல் பாதிப்புகளால் நிரம்பியுள்ளன. இது குறித்து அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டி.ரவிக்குமார் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் வெளியில் வராததால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்திருக்கும் எனவும் அதனால் மிக அதிகமான காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: "தமிழகத்தில் 282 பேருக்கு H1N1 காய்ச்சல் பாதிப்பு" - அமைச்சர் மா.சு
புதிதாக பள்ளிக்கு செல்லும் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு தான் பொதுவாக சளி, காய்ச்சல் ஏற்படும், ஆனால் இந்த ஆண்டு பள்ளி செல்லும் அனைத்து வயது குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்படுவதாக அவர் கூறுனார். மேலும் பரிசோதினையில், மலேரியா, டெங்கு, டைபாய்டு, சிறுநீர் தொற்று என எந்த நோயும் கண்டறியப்படுவதில்லை எனவும் காற்றில் பரவும் சில வகை வைரஸ் காரணமாகவே காய்ச்சல் ஏற்படுவதாக கூறுனார்.
அதே போன்று சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான வார்டுகள் நிரம்பி வருகின்றன. கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக உள்ள 40 இடங்களும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் உள்ள 40 இடங்களும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 60 படுக்கைகளில் 30க்கும் மேற்பட்ட படுக்கைகள் நிரம்பிவிட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Children, Children antibody, Govt hospitals