சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சரக்கு விமானம் ஒன்று பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய ஊழியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக இன்றும் கோலோச்சி நிற்பது உக்ரைன் நிறுவனம் தயாரித்த ஏ.என்-225 மிரியா. 275 அடி நீளம் கொண்ட மிரியாவுக்கு போட்டியாக, ஏர்பஸ் நிறுவனம் களமிறக்கிய சரக்கு விமானம்தான் பெலுகா எக்ஸ்.எல்.
பெலுகா என்பது, ஆர்க்டிக் பெருங்கடலில் காணப்படும் பாலூட்டி வகையைச் சேர்ந்த வெள்ளை நிறத்திலான திமிங்கலம்... நீலத் திமிங்கலத்தின் குட்டியை விட மிகக் குறைந்த எடையும், நீளமும் கொண்டதுதான் இந்த பெலுகா திமிங்கலம்.
20 அடி நீளம், ஆயிரத்து 500 கிலோ வரை எடை கொண்ட பெலுகா திமிங்கலத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட இந்த சரக்கு விமானத்தின் நீளம் 184 அடி... பயணிகள் விமானத் தயாரிப்பில் பெயர் பெற்ற ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள பெலுகா எக்ஸ்.எல். சரக்கு விமானம் முதன்முதலில் பறக்கத் தொடங்கியது 2020 ஜனவரியில்.
வெள்ளை நிறத்தில் ராட்சத தோற்றம் கொண்ட இந்த விமானத்தில் 2 விமானிகளோடு, மேலும் 2 பேரைத் தவிர வேறு யாரும் பயணம் செய்ய இடமில்லை என்பது மிகப்பெரும் ஆச்சரியம். முழுக்க முழுக்க சரக்குகளை கொண்டு செல்வதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் எடை ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோ. 52 டன் வரை சரக்குகளை ஏற்றக் கூடிய இந்த விமானத்தில், 40 பெலுகா திமிங்கலங்களை அப்படியே ஏற்றிக் கொண்டு செல்ல முடியும்.
இதையும் படிங்க: சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து, லீசுக்கு விட்டு ₹20 கோடி அபேஸ்.. ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது 154 பேர் புகார்
அல்லது ஒரே நேரத்தில் 13 யானைகளையோ, சராசரியாக 75 கிலோ எடை கொண்ட 700 மனிதர்களையோ அள்ளிப் போட்டுக் கொண்டு அப்படியே பறக்கக் கூடியது பெலுகா எக்ஸ்.எல்...
ஆனால், இது பயன்படுத்தப்படுவது விண்வெளி, ராணுவம் மற்றும் விமானப் போக்குவரத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொண்டு செல்ல மட்டுமே.
இறக்கைகளுடன் கூடிய முழு ஹெலிகாப்டரையோ, குட்டி விமானத்தையோ தன்னுள் வைத்துக் கொண்டு பறக்கும் அளவுக்கு வல்லமை கொண்டது பெலுகா எக்ஸ்.எல். இத்தனை ஆயிரம் கிலோ எடையை சுமந்து கொண்டு, இது பறக்கும் வேகத்தைக் கேட்டால், இன்னும் ஆச்சரியம்தான்.
சென்னையில் இந்த விமானத்தில் புறப்பட்டு, தமிழ்நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமரியை அடைய தேவை வெறும் முக்கால் மணி நேரம் மட்டுமே. ஏனெனில், பெலுகா எக்ஸ்.எல். விமானம், காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் வேகம் மணிக்கு 864 கிலோ மீட்டர்.
மேலும் படிக்க: ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளி பியூன் போக்சோவில் கைது
இந்திய மதிப்பில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட பெலுகா எக்ஸ்.எல். விமானம், இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது வெறும் 6 மட்டுமே. ஆரம்பத்தில், ஐரோப்பாவில் உள்ள தனது விமானத் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு, பாகங்களை மட்டுமே கொண்டு செல்லப் பயன்படுத்தி வந்தது ஏர்பஸ்.
காலப்போக்கில் வெளி நிறுவனங்களுக்கும் சரக்குகளை கொண்டு செல்லும் கமர்ஷியல் விமானமாக மாற்றி, காசு பார்த்து வருகிறது ஏர்பஸ் நிறுவனம். இவ்வாறு, சரக்கை ஏற்றி இறக்கிவிட்டு, சிங்கப்பூர் நோக்கிச் சென்றபோதுதான், எரிபொருள் நிரப்ப சென்னை விமான நிலையத்தில் இந்த வெள்ளை திமிங்கலம் கரை ஒதுங்கியது. சென்னையில் முதல்முறையாக இந்த ராட்சத விமானம் தரையிறங்கியதை பார்த்து பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய ஊழியர்களும் மலைத்துப் போனதிலேயே தெரிந்திருக்கும் பெலுகா விமானத்தின் பிரமாண்டம்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.