Home /News /chennai /

குடிசைகளை தார்பாய் கொண்டு மறைக்கும் ஆட்சி அல்ல திராவிட மாடல் ஆட்சி - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

குடிசைகளை தார்பாய் கொண்டு மறைக்கும் ஆட்சி அல்ல திராவிட மாடல் ஆட்சி - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. அடுத்து வந்த கலைஞர் ஏழையின் சிரிப்பில் அண்ணாவை காண்போம் என்றார். இப்போது ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்போம் என்பது தான் என் உணர்வு"

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வந்தால் குடிசைகளை தார்பாய் கொண்டு மறைக்கும் ஆட்சி அல்ல திராவிட மாடல் ஆட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

    தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ரமணா நகர் கௌதமபுரம் பகுதியில் ரூ.111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். அந்த குடியிருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 1,95,39,000 மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள், நூலகக் கட்டடம் மற்றும் பூங்கா அமைப்பதற்கான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.

    அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னையில் குடிசைகள் அதிகமாக இருந்தது. ஆகவே ஆங்காங்கே மழை பெய்தால் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள். வெயில் காலத்திலும், வெயிலை தாங்க முடியாமல் தீப்பற்றக் கூடிய சூழல் ஏற்பட்டது அல்லது சமையல் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விபத்தில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைகள் எரித்தது.

    இதை எப்படி சரி செய்வது என அண்ணா யோசித்து வீடுகள் எரியாத வகையில் கூரைகளுக்கு பதிலாக ஆஸ்பாட்டா ஷீப் போடப்பட்டது. மீண்டும் மழை பெய்யும் போது மக்கள் சிரமம் அடைந்தனர். அதன்பின் அண்ணா மறைவிற்கு பின் ஆட்சி பொறுப்பு ஏற்ற கலைஞர், இந்தியாவில் முதல்முறையாக குடிசை மாற்று வாரியத்தை ஏற்படுத்தி தரமான வீடுகளை கட்டிக்கொடுத்தார். தற்போது அத்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.

    குடிசையை மாற்றி கட்டடம் கட்ட வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல எனவும் நகர்புற மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும், வாழ்க்கை தரமும் மேம்பட வேண்டும் என்பது  தான் அரசின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: முதலமைச்சர் எழுதிய ‘திராவிட மாடல்’ புத்தகம் - செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழாவில் வெளியீடு!

    மேலும், “சில மாநலங்களில் பெரிய விழா நடைபெறும் போது, வெளிநாட்டில் இருந்து தலைவரை அழைந்து வந்து அவர்கள் கண்களுக்கு குடிசைகள் தெரியக்கூடாது என தார்ப்பாய்களை போட்டு மறைக்கும் நிலை இருக்கிறது. அது போன்ற மாடல் அல்ல திராவிட மாடல்” என கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. அடுத்து வந்த கலைஞர் ஏழையின் சிரிப்பில் அண்ணாவை காண்போம் என்றார். இப்போது ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்போம் என்பது தான் என் உணர்வு. ஏழைகளின் முகத்தில் மலர்ச்சியை காணும் வகையில் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தும்” என்றார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Dravidam, Gujarat

    அடுத்த செய்தி