அன்பு, குடும்பம், கலாச்சாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். பல விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்து கொண்ட இருக்கிறோம். அப்படி நாம் விட்டுக்கொடுப்பது நாம் அடுத்த தலைமுறை பெண்களுக்கு செய்யும் துரோகம் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பேசினார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை அரசு விழாவில் திமுக எம்பி கனிமொழி, ஐஏஏஸ் அதிகரி பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளிடையே உரையாற்றினர்.
விழாவில் மாணவிகள் மத்தியில் பேசிய கனிமொழி, “பெண்கள் வேலைக்கு போக கூடாது என்ற நிலை இருந்தபோது, பெண்கள் ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும் என பெரியார் தீர்மானம் இயற்றினார். கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் பெண்கள் மேலாடை அணிய வரி விதிக்கப்பட்டது. பல போராட்டங்கள் பின்னர் மேல் ஆடை அணிய அனுமதி கிடைத்தது. ஆனால் இன்று பெண்கள் இந்த உடையைத் தான் அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள்” என கூறினார்.
“இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ச்சி மிக சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. அதை எதிர்த்து போராட வேண்டிய சூழல் இருக்கிறது. வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. ஆனால் இது போன்ற தாக்குதல் எதிராக போராட்டம் மேற்கொள்ள வேண்டும்.
ஜாதி சான்றிதழ் எதுக்கு? யார் யார் எல்லாம் காலம் காலமாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து மக்களுக்கு உதவதான் ஜாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவி தொகை அரசு வழங்கவும் இட ஒதுக்கீடுகள் கொடுக்கவும்தான் ஜாதி சான்றிதழ். ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் பெரும் போராட்டம் தேவைப்படுகிறது” என தெரிவித்தார்.
மேலும், நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று சொல்வதுதான் சமூக புரட்சி, ஒரு காலத்தில் மருத்துவ கல்லூரிகளில் படிக்க சமஸ்கிருதம் படித்து இருந்தால்தான் போக முடியும் என்று இருந்த நிலையை மாற்றியது நீதி கட்சியின் ஆட்சி. இந்தியாவிற்கே மருத்துத்துறையில் தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கிறது என்றால் அன்று நாம் சமஸ்கிருதத்தை தூக்கி எரிந்ததுதான் காரணம் என்று தெரிவித்தார்.
பெண் விடுதலையை அதிகம் பேசியவர் தந்தை பெரியார், சமூக மாற்றம் என்பது நம்மில் இருந்துதான் முதலில் வர வேண்டும், அது உங்களில் இருந்து வர வேண்டும். சமூக மாற்றம் என்பது துப்பாக்கி முனையில் இருந்து உருவாகாது, நம் முதுகெலும்பில் இருந்து உருவாக்கும். தயவு செய்து மாணவிகள் எழுந்து நின்று கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாணவிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கலந்துரையாடிய கனிமொழி, “ஆண் பெண்ணுக்கு உள்ள உரிமை திருநங்கை மற்றும் அனைத்து பாலினத்தவருக்கும் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு அதிகளவில் வழங்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த மாற்றம் முழுமையாக நடக்க வேண்டும் அதுவே என் ஆசை.
தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானால்?’ புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும். பெண்கள் தொடர்ந்து சமூக புரட்சி செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் சமூக புரட்சி நிற்காது. ஆண்களுக்கு சரிசமமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தும் இந்த சமூகம் பெண்களை மிதித்து கொண்டேதான் இருக்கிறது. அன்பு, குடும்பம், கலாச்சாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். பல விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்து கொண்ட இருக்கிறோம். அப்படி நாம் விட்டுக்கொடுப்பது நாம் அடுத்த தலைமுறை பெண்களுக்கு செய்யும் துரோகம், பெண்கள் தெளிவோடு நம் இலக்குகளுக்காக போராட வேண்டும்” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanimozhi, Women Empower, Women's Rights