மாற்றுதிறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் இவற்றில் சென்னையில் 242 பேருந்துகளும் மதுரை மற்றும் கோவையில் தலா 100 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் சரி செய்யபட்டு வருவதாகவும், அதனால் மாற்றுத்திறனாளிகள் அணுக கூடிய வகையில் முழுமையாக பேருந்துகள் இயங்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் 37.4% பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் தயார் செய்யபட உள்ளதாக கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தாழ்தள பேருந்துகள் என்பது மாற்றுதிறனாளிகளுக்கானது என கூறுவது தவறானது என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது இன்றளவும் சவாலானதாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கொள்முதல் செய்யக்கூடிய பேருந்துகளில் 100 சதவீத பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் மாற்றியமைக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதால் 100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என தெரிவித்தார். இதனையடுத்து, என்னென்ன தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Chennai High court