ஹோம் /நியூஸ் /சென்னை /

பணி சுமையால் நின்று போன மகளின் நிச்சயதார்த்தம்: காவல் ஆய்வாளருக்கு வருத்தம் தெரிவித்து டிஜிபி சைலேந்திர பாபு கடிதம்!

பணி சுமையால் நின்று போன மகளின் நிச்சயதார்த்தம்: காவல் ஆய்வாளருக்கு வருத்தம் தெரிவித்து டிஜிபி சைலேந்திர பாபு கடிதம்!

டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய கடிதம்

டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய கடிதம்

முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என டிஜிபி சைலேந்திர பாபு தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் வேலையின் காரணமாக விடுப்பு தராததால் தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நின்றுவிட்டதாக ஆடியோ ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார். அது வைரலான நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு இந்நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  காவல் துறையை பொருத்தளவு அவர்களின் தியாகமும், சேவையும் என்றும் பெருமளவில் இருந்துள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது முதல் கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காண்பது வரை, பேரிடர்களின் போது உதவி செய்வது முதல் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவது வரை, எந்தவித தயக்கமுமின்றி நமது காவல் துறையினர் எப்பொழுதும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனர்.

  ஆனால் நாட்டிற்காக குடும்ப வாழ்வில் அவர்கள் செய்யும் தியாகங்கள் பல. இக்கட்டான சூழ்நிலைகளில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுவதுண்டு. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு. அதுபோன்றதொரு சம்பவம்தான் அரங்கேறியுள்ளது.

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தான ராஜ் இவரது மகளுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்தநிலையில் கோவையில் திடீரென ஏற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் காவலர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டு பல்வேறு மாவட்டத்தில் உள்ள காவலர்கள் கோவை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்  காரணமாக தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள விடுப்பு கிடைக்கவில்லை எனவும் இதனால் நிச்சயதார்த்தம் தடைபட்டுவிட்டது என்றும்  காவலர் சந்தான ராஜ் வேதனையோடு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  Read More : குறைகிறது ஆம்னி பேருந்து கட்டணம்... புதிய பட்டியல் விரைவில் வெளியாகிறது

  அதில் தனது மகள் நிச்சயதார்த்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வாகனம் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. வேறு ஒருவரை கோவைக்கு அனுப்புங்கள் என்று கேட்டும் உயர் அதிகாரி மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். காவல்துறையில் 30 ஆண்டுகள் பணி புரிந்து என்ன பயன் என வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். இந்த ஆடியோ சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்தநிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜ்க்கு டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார் அதில்,

  அன்புள்ள சந்தானராஜ்... தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொளி வாயிலாக கண்டறிய நேர்ந்தது. தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடை பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

  இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தான ராஜ்க்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Sivagangai, Sylendra Babu