கன்னிகாபுரம் முத்துநகரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தைக்கு உணவு கொடுப்பதற்காக கடந்த 30ஆம் தேதி இரவு தனது விலை உயர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் ராஜிவ் காந்தி மருத்துவமனை வந்துள்ளார்.
தந்தைக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கீழே வந்து பார்த்தபோது ராஜீவ் காந்தி மருத்துவமனை டவர் 1- ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதற்கு முன்பும் இதே போல ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போய் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தை உடைத்து மருத்துவமனையில் இருந்து திருடி செல்வது தெரிய வந்தது.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் கொடுங்கையூர் கடுப்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஸ்ரீதர் மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை டாக்டர் விஜயராகவலு சாலையைச் சேர்ந்த டன்சோ ஆன்லைன் உணவு டெலிவரி பாயான அசாருதீன்(28) என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை, கே.எம்.சி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை போன்றவற்றில் நோயாளிகளை பார்க்க வருபவர்களின் இருசக்கர வாகனங்களை சிறிது நேரத்தில் திருடி விடுவதும் மேலும் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளான மெரினா பீச், பாண்டி பஜார், பாரிஸ் கார்னர் போன்ற பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களை திருடுவதையும் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவர்களுடன் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்த இவர்களது நண்பர்களான கொடுங்கையூர் B பிளாக்கை சேர்ந்த ஃபயாஸ் (29), பெருங்காவூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பைக் மெக்கானிக்கான ராஜசேகர்(29) மற்றும் பெருங்காவூர் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான அஜித்குமார்(26) ஆகிய மூன்று நபர்களை தனிப்படை போலீசார் விரைவாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 நபர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனைகள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உணவு டெலிவரிக்காக செல்லும் அசாருதீன் அங்கு தனியாக நிற்கும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து உடனடியாக ஸ்ரீதரிடம் சொல்லி விடுவதும் பின் ஸ்ரீதர் ஃபயாஸ் ஆகியோர் இரு சக்கர வாகனங்களை திருடி அதன் பின் அந்த வாகனத்தை பைக் மெக்கானிக்கான ராஜசேகரிடம் கொடுத்து விடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பின்பு ராஜசேகர் தனது ஷெட்டுக்கு வாகனத்தை எடுத்துச் சென்று அங்கு போலி நம்பர் பிளேட், போலி ஆர்.சி.புக் ஆகியவற்றை தயார் செய்து அதனை கார் மெக்கானிக்கான அஜித்குமாரிடம் கொடுத்து விடுவதும் பின் அஜித் குமாரிடம் வந்து சேரும் இருசக்கர வாகனங்களை அவர் பிறருக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது.
குறிப்பாக அஜித்குமாரின் கார் மெக்கானிக் ஷெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனது நண்பர் ஸ்ரீதர் என்பவர் வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும் அங்கு இ.எம்.ஐ.(EMI) -ல் பைக் எடுக்கும் வாடிக்கையாளர்கள் பணம் கட்டாததால் வங்கியில் இருந்து பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்களை குறைந்த விலைக்கு விற்று விடுவதாகவும் கூறி திருட்டு வாகனங்களை விற்பனை செய்வதற்கு வாடிக்கையாளர்களை பிடித்து வந்துள்ளார்.
இவர்களின் மோசடியை அறியாத நபர்கள் தங்களுக்கு எந்த வகை இருசக்கர வாகனம் வேண்டுமென்று கேட்கிறார்களோ? அந்த வகை வாகனத்தை செல்போனில் படம் பிடித்து அந்நபருக்கு அனுப்பி மொபைலில் படம் எடுத்து அனுப்பி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
ஸ்ப்ளெண்டர் வகை வாகனங்கள் ரூ.5000க்கும், டியோ, ஃபேசினோ, வெஸ்பா போன்ற ஸ்கூட்டி வகை வாகனங்களுக்கு பத்தாயிரம் வரையிலும், ராயல் என்ஃபீல்டு வகை வாகனங்கள் 15 லிருந்து 20 ஆயிரம் வரையிலும், R15 வாகனங்கள் இருபதாயிரம் வரையிலும் விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கிடைக்கும் பணத்தை ஐந்து நபர்களும் சரிசமமாக பங்கிட்டு மது, பெண்கள், போதை வஸ்துகள் என உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஸ்ரீதர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் அசாருதீன் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இவருடன் சேர்ந்து ஆன்லைன் டெலிவரி செய்வதுபோல் வாகனங்களை திருட பிளான் போட்டு கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
ஸ்ரீதர், ராஜசேகர், ஃபயாஸ் ஆகியோர் மீது சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவுகள் இருப்பதும் இவர்கள் இதுவரை 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடமிருந்து 22 இருசக்கர வாகனங்களை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்த நபர்களை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike Theft, Chennai, Swiggy, Zomato