கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் உடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பிரிவிற்கென மட்டும் சென்னையில் 36 காவல் நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது அவற்றில் தலா மூன்று ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளன.
ஆனாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள், கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் 69 போக்சோ வழக்குகள், 151 பாலியல் சீண்டல் தொடர்பான வழக்குகள், 71 வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகள் மற்றும் 13 பாலியல் வன்கொடுமை என 304 வழக்குகள் பதிவாகியிருந்தன.
அந்த வகையில் 2018ம் ஆண்டு 310 வழக்குகளும், 2019ம் ஆண்டு 291 வழக்குகளும் பதிவாகின.
அதேநேரம் கொரோனா பரவ தொடங்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 2020ம் ஆண்டில் 618 வழக்குகளும், 2021ம் ஆண்டில் 989 வழக்குகளும் பதிவாகின.
ALSO READ | நெல்லை கல் குவாரி விபத்தில் 3 பேர் பலி.. பாறைகள் சரிவால் மீட்பு நடவடிக்கையில் தோய்வு
இந்நிலையில் நடப்பாண்டில் முதல் இரண்டு மாதங்களிலேயே போக்சோ பிரிவில் 49 வழக்குகள், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 33 வழக்குகள் என, பெண்கள் மாற்றும் குழந்தைகளுக்கு எதிராக மட்டும் 114 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
இது விகிதாச்சார அடிப்படையில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்புப் பிரிவு துணை ஆணையர் சியாமளாதேவி நமக்கு அளித்த பேட்டியில், "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று சொல்வது சரியல்ல; பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு அதன்பேரில் புகாரளிக்க முன்வருகிறார்கள் என்பதே சரியானதாகும்" என்றவர் "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் ஏற்பட்டால் குடும்ப மானம் போய்விடும் என கருதி புகார் அளிக்க முன்வராத சூழல் இருந்தது.
மேலும், தனக்கு நடக்கும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பெண்கள் வீட்டில் சொல்லமுடியாத நிலை இருந்து வந்தது. சொன்னால், அப்பெண்ணின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை நிறுத்திவிடுவார்கள். தற்போது குடும்ப வன்முறைகள் குறித்தும் பாலியல் தொல்லை குறித்தும் காவல்துறையால் தொடர்ச்சியாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் பெண்களுக்கு புகார் அளிக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.
மேலும் "இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவரிடமும் செல்லும்பட்சத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முழுவதுமாக குறைந்து விடும்" எனவும் மேலும், புகார் அளிக்கும் நபர்களின் ரகசியங்கள் காவல்துறையினரால் 100% பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1091, 1098, 181 ஆகிய எண்களில் அழைத்தும் 9500099100 என்ற மொபைல் எண்ணில் மெசேஜ் செய்தும் புகாரளிக்களாம்" எனவும் தெரிவித்தார்.
குடும்ப மானம் போய்விடும் என்ற எண்ணமே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணியாக விளங்குகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு காவல் நிலையத்தில் புகார் அளிப்பதே அவர்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் தற்போதைய மிகப்பெரிய ஆயுதம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Child Abuse, Sexual abuse, Sexual harassment, Woman