சென்னையைச் சேர்ந்த கிரண்குமார் சவா என்பவருக்கும், உஷா கிரண் ஆனி என்பவருக்கும் 1999-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் இருவரும் அமெரிக்காவின் வெர்ஜினியாவுக்கு சென்று விட்டனர். அங்கு அவர்களுக்கு 2008-ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டை குழந்தைகளுடன் சென்னை திரும்பிய உஷா, பின் அமெரிக்கா திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், 2021-ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் கிரண்குமார், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
இந்த பின்னணியில், இரு குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க கோரியும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரியும் உஷா, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, கணவருக்கு எதிராக எழும்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி கிரண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, அமெரிக்க நீதிமன்றம் விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ள நிலையில், சேர்த்து வைக்கக் கோரியும், குழந்தைகளை ஒப்படைக்க கோரியும், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடர முடியாது என கிரண்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையின் போது, இரு குழந்தைகளையும் வரவழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள், தாயுடன் இருக்கவே விரும்புவதாகவும், தந்தையுடன் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, இந்து திருமண சட்டம், குடும்ப வன்முறை தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் பெண்களின் நலனுக்காக இயற்றப்பட்டவை என்றும், வெளிநாடு வாழ் இந்தியர் என அட்டை பெற்றவர்கள், கால வரம்பின்றி இந்தியாவில் வசிக்க உரிமை உள்ளதால் அவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும், இந்த சட்டங்களின் கீழ் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும் என்றும் கூறி, கிரண்குமாருக்கு எதிராக மனைவி தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்ய மறுத்து விட்டார்.
மேலும், இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் எனவும், இதற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒரு தரப்பு வாதத்தை கேட்டு பிறப்பித்த விவகாரத்து உத்தரவு தடையாக இல்லை எனவும் கூறி, இந்த வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, குழந்தைகளை உஷாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து உத்தரவிட்ட நீதிபதி, கிரண்குமாரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.