ஹோம் /நியூஸ் /சென்னை /

பூட்டிய வீட்டில் கணவன் மனைவி சடலமாக மீட்பு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

பூட்டிய வீட்டில் கணவன் மனைவி சடலமாக மீட்பு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

Crime News : சென்னை புளியந்தோப்பில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(45), இவரது மனைவி துலுக்காணம்(35), இவர்களுக்கு  திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இருவரும் மாங்காடு 128வது வார்டில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இதற்கிடையில், 13 வருடங்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு இருவரும் உறங்க சென்றனர். அதன்பிறகு இருவரும் வெளியே வரவில்லை.

இந்நிலையில், இன்று காலை சக்திவேல் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புளியந்தோப்பு போலீசார்  சம்பவ இடம் சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது சக்திவேல் கயிற்றில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதையும் படிங்க : ஓஎஸ்ஆர்  நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதா? ஆக்கிரமிப்பில் உள்ளதா? கண்காணிக்க தணிக்கைக் குழு - மேயர் பிரியா உறுதி

மேலும், அவரது மனைவி துலுக்காணம் கட்டிலில் படுத்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இரண்டு பேரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து இருவரது சடலத்தையும் கைப்பற்றிய புளியந்தோப்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், இதில் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அவரது மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் துலுக்காணம் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : அசோக்குமார் - சென்னை

தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Chennai, Crime News, Local News