நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மென்பொறியாளர் சுவாதியை ராம்குமார் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி இயங்காததால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இதை அடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவும் சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து இயங்கவும் உத்தரவிடப்பட்டது.
இதன்பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அந்த வரிசையில் தற்போது சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் கைதாகி இருக்கிறார். இவர் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் ஆவார்.
இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரை பள்ளி பருவம் முதல் கொண்டு காதலித்து வந்திருக்கிறார். கருத்து வேறுபாட்டினால் பின்னர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவியான சத்யாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமானதாக சதீஷ்க்கு தகவல் கிடைத்திருக்கிறது.
வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யா உடன் இதுகுறித்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது கோபத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயிலின் முன் மாணவி சத்யாவை தள்ளிவிட்டுள்ளார் சதீஷ். வேகமாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மாணவி சத்யா. இதை அடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சத்யாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலை செய்து விட்டு ஓடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையில், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையாளி சதீஷ் நுழையும் சிசிடிவி காட்சி வெளியானது.
இதற்கிடையில் சத்யா படுகொலை செய்யப்பட்ட துக்கத்தில் இருந்த அவரது தந்தை மாணிக்கம் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாக கூறப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று காலை சத்யா மற்றும் அவரின் தந்தை மாணிக்கம் ஆகியோரின் உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதில் தற்கொலை செய்துகொண்ட சத்யாவின் தந்தை மாணிக்கம் மதுவுடன் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
Also see...Sadhguru: வெற்றியின் ரகசியம் இதுதான் - சத்குரு விளக்கம்
சென்னை ரயில் நிலையங்களில் இளம்பெண், மாணவிகள் என்று அடுத்தடுத்து படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் சமூகத்தில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. அனைத்து ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Murder