குற்றச்செயல்கள் அதிகம் நிறைந்த பகுதியாக பார்க்கப்படும் சென்னை கண்ணகிநகர் பகுதியில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பல மாற்றங்களை கொண்டுவந்து முதல் பட்டதாரிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கி வருகிறார்.
கண்ணகிநகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 23,704 குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்ககூடிய மக்கள் தினக்கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இப்பகுதி குழந்தைகளால் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேற்கொண்டு கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு முயற்சியால் பல முதல் பட்டதாரிகள் கண்ணகிநகர் பகுதியில் உருவாகி வருகின்றனர்.
கண்ணகிநகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் தவறான பாதையில் தடம்மாறி போய்விடக்கூடது என்றும் முதல் பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடனும் கடந்த 2016-ம் ஆண்டு மாரிசாமி என்பவர் தனி ஒருவராக டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தை துவங்கியுள்ளார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு.ஐஏஎஸ் வழிகாட்டுதலின்படி டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் மூலம் கண்ணகிநகர் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுள்ளது. குறிப்பாக 12 மையங்களில் 650 மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள், பறைஇசை, கராத்தே, குத்துச்சண்டை, யோகா, சிலம்பம், கபடி, வாலிபால், சதுரங்க விளையாட்டு, கேரம்போர்டு, மியூசிக் போன்ற பல்வேறு பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அப்பகுதி சிறுவர்கள் பண்பாட்டு பயிற்சிகளான பறைஇசை, நாடகம் போன்றவற்றில் கூடுதல் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இங்கு பயிற்சி கொடுக்கப்படும் நபர்கள் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், பாராட்டுகளையும் பெற்று தங்களது தனித்திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்படி விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு படிக்க வேண்டும் என்று கூறுவதால் சிறுவர்கள் படிப்பையும் தொடர்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் நிலவொளி கல்வியின் மூலம் சுமார் 30-வயது முதல் 84-வயதுடையவர்கள் என 60 நபர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்துள்ளனர்.
இதில் பயின்ற வைதேகி என்ற பெண்மணி அதே பயிற்சி பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் தனது பேரக் குழந்தையுடன் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுள்ளார். கணவனை இழந்த வைதேகி சுமார் 24 வருடங்கள் கழித்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதால் சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பதவி உயர்வு கிடைத்துள்ளது.
35-வயது அமுதா 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று அரசு பள்ளியில் சமையல் வேலை செய்கிறார். சில மூதாட்டிகள் தங்களது பேரப்பிள்ளைகளுக்கு கல்வி சொல்லித் தருவதாகவும் பெருமையுடன் தெரிவித்தனர். இங்குள்ள மாணவர்களுக்கு TNPSC க்கான பயிற்சிகளை வழங்குவதின் மூலம் அரசுத்துறைகளில் பணியில் சேர்வதற்கான விழிப்புணர்வும், வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியை தழுவிய சிலர் படிப்பை தொடர முடியாமல் சிறுவயதிலேயே வேலைகளுக்கு செல்லும் சூழலில் இருந்தவர்களுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் மூலம் உரிய பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்ச்சி பெற வைத்து மேற்படிப்பை தொடர வழிவகை செய்கின்றனர்.
2018-2019-ம் ஆண்டு 10 மாணவர்களையும், 2019-2020-ம் ஆண்டு 18 மாணவர்களையும், 2020-2021-ம் ஆண்டு 35 மாணவர்களையும், 2021-2022-ம் ஆண்டு 55 மாணவர்களை விரும்பிய கல்லூரியில் கேட்ட பாடப்பிரிவில் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளாக படிக்க வாய்ப்பு இல்லாத மாணவர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு படிக்க வைத்துவருகிறார். அதேபோல் இந்த ஆண்டும் 52 மாணவர்களை விரும்பிய பாடப்பிரிவில் படிக்க முயற்சி செய்துள்ளார்.
Also see... ITR கணக்கு யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும்?
எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட இரு சகோதரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் உரிய பயிற்சி கொடுத்து மற்றவர்கள் உதவியுடன் தேர்வு எழுதி வெற்றிபெற்று தற்பொழுது கல்லூரியில் படிக்க உள்ள அவர்கள் தலைமை செயலாளர்க்கு நன்றியை தெரிவித்தனர்.
தலைமை செயலாளர் உதவிக்கரம் நீட்டும் அனைவரும் பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய பெற்றோர்களின் பிள்ளைகள் அனைவரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதும், இதில் அதிகப்படியாக மாணவிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் தாய், தந்தை இழந்தவர்கள் மதிப்பெண்கள் மிக குறைவாக இருந்தாலும் அவர்களை கல்லூரியில் சேர்த்து வைப்பதுடன் முழு கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டு படிக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்.
மாலை நேர பயிற்சி வகுப்பில் பயின்ற 31 மாணவர்கள் ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்களின் நினைவாக விண்ணில் செலுத்திய மிகச் சிறிய (50 கிராம்) செயற்கைக்கோள்களை செலுத்தும் குழுவில் இணைந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கியதன் மூலம் கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட், நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் போன்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
Also see... நீட் குறித்த மத்திய அரசு கேள்விகளுக்கு பதில்கள் தயார் - அமைச்சர் மா.சு
கண்ணகிநகரில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். நகரத்தின் நவீனத்துவமும் மிக அருகாமையில் இருக்கும்போதும், இந்த புறநகர்ப் பகுதி நகர வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டே நிற்கின்றது. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் தலைமை செயலாளர் இறையன்புவின் முயற்சியால், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், சமூக சிந்தனையுடனும் மாறிவருகிறார்கள் கண்ணகிநகர் மக்கள்.
செய்தியாளார்: ப.வினோத்கண்ணன், இசிஆர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Iraianbu IAS