ஹோம் /நியூஸ் /சென்னை /

சாவகாசமாக டீ குடித்துவிட்டு கடத்தல் நாடகம்.. சூதுகவ்வும் படம் போல ப்ளான் போட்ட இளம்பெண்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி!

சாவகாசமாக டீ குடித்துவிட்டு கடத்தல் நாடகம்.. சூதுகவ்வும் படம் போல ப்ளான் போட்ட இளம்பெண்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Crime | சூது கவ்வும் திரைப்பட பாணியில் இளம்பெண் கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Poonamallee

சென்னையில் சூது கவ்வும் பட பாணியில் கடத்தல் நாடகமாடி தாயிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணை போலீசார் நேரில் அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் படத்தில் சொந்த மகனே அப்பாவிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடுவார். அப்படியான ஒரு சம்பவம் தற்போது நிஜத்திலும் நடந்துள்ளது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 22வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு தனது தாயின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தன்னை மர்மநபர்கள் சிலர் பூந்தமல்லியில் கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளதாகவும், ரூ.50 ஆயிரம் பணத்தை நேர்டியாக வந்து கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக கூறி மிரட்டுவதாகவும் மிகவும் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தாயார், இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பெண்ணின் தொலைபேசிக்கு வந்த எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். தொடர்ந்து அந்த எண்ணிற்கு அழைத்து போலீசார் பேசிய போது எதிர் தரப்பில் பேசிய மர்மநபர்  முன்னுக்கு பிண் முரணாக பதில் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இளம்பெண்ணை தேடி வந்த நிலையில், அவர் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே தனியாக நின்று கொண்டிருந்தார்.

அவரை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தான் கோயம்பேட்டில் நின்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த 3 பேர் தன்னை கடத்தி சென்றதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்தார். பின்னர் சிறுது நேரங்கழித்து இந்த இடத்தில் இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இவரின் கருத்தை பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், கடத்தப்பட்ட இளம்பெண்ணும், அவருடன் வந்த 2 தோழிகள் மற்றும் வாலிபர் ஒருவரும் பைக்கில் வந்திறங்கி டீக்கடையில் ஜாலியாக அமர்ந்து பேசியதும், பின்னர் தோழியின் செல்போனை வாங்கிய இளம்பெண் தனியாக சென்று பேசிவிட்டு பிறகு அனைவரும் மீண்டும் பைக்கில் ஒன்றாக சென்றது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணிடம் கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கினர்.

அப்போது, அச்சமடைந்த இளம்பெண், தான் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால், சூதுகவ்வும் பட பாணியில் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயன்றதாக ஒப்பு கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் இளம்பெண் மற்றும் அவரது நண்பர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Cheating case, Chennai, Crime News