தமிழகத்தில் முதன் முறையாக ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் ஆய்வாளர் மீனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் யார் என்பது குறித்து பார்ப்போம்..
சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் உதவி ஆய்வாளரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதைத்தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்ட கெளதம் மற்றும் அஜித் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர், அவரை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென பெண்டு சூர்யா கேட்டத்தை அடுத்து நியூ ஆவடி சாலையில் இருக்கும் ஆர்டிஓ அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது இளநீர் கடை அருகே பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் அமானுதீன் மற்றும் சரவணன் ஆகியோரை வெட்டியுள்ளார். இதனை உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியை காட்டி எச்சரிக்கை விடுத்த போதும் கையில் இருந்த கத்தியால் காவலர்களை மீண்டும் தாக்க முற்படும்போது உதவியாளர் மீனா பெண்டு சூர்யாவின் இடது கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி பெண்டு சூர்யாவை பிடித்தார்.
காவலர்களை கத்தியால் தாக்கி தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடியை தமிழகத்திலேயே முதன் முறையாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டு பிடித்திருப்பது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும், துரிதமாக செயல்பட்டு ரவுடியை சுட்டு பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மீனாவை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
யார் இந்த காவல் உதவி ஆய்வாளர் மீனா!
தமிழகத்தின் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கும் காவல் உதவி ஆய்வாளர் மீனா கடந்த 2016 ஆம் ஆண்டு பேட்ச் நேரடி காவல் உதவி ஆய்வாளர் ஆவார். சென்னை அடுத்த மதுராந்தகத்தைச் சேர்ந்த இவர், விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் ஆவார்.
காவல்துறை வேலைக்கு குடும்பத்தினர் மறுப்பு சொல்லியபோதும் துணிகரமாக காவல்துறையில் சேர்ந்து மிகச் சிறப்பாக பணியாற்றி வருபவர் மீனா.
காவல்துறையில் சேர்ந்ததும் முதன் முதலில் தலைமைச் செயலகம் காலனி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்து பின் துணை ஆணையர் தனிப்படை பிரிவில் சேர்ந்து பல குற்றவாளிகளை பிடித்துள்ளார். தற்போது, அயனாவரம் காவல் உதவி ஆணையர் தனிப்படை பிரிவில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு பல குற்றவாளிகளை தனியாக சென்று கைது செய்து அசத்தி வருகிறார்.
பத்து நாட்களுக்கு முன்பு அயனாவரம் பகுதியில் நடந்து சென்ற நபரை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற சம்பவத்தில் அன்று இரவுக்குள்ளாகவே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து ஆகாஷ், சுபாஷ், பிரவீன் ஆகிய மூன்று குற்றவாளிகளை தனியாக சென்று கைது செய்து வந்துள்ளார். இந்த சம்பவத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் உதவி ஆய்வாளர் மீனாவை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Police, Crime News