அய்யா ஆடு திருடு போகல.. ஆடு திருடு போன மாதிரி கனவுதான் கண்டேன் என நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்தகாட்சியைப் போல் சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகர் புகழேந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(36). இவர் சிறுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் சிறுச்சேரி பகுதியில் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்மக்கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 130 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக சரவணன் எம் ஜி ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக எம்.ஜி.ஆர் நகர் போலீசாரும், அசோக் நகர் காவல் உதவி ஆணையரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து போலீசார் பீரோவை சோதனை செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திருடப்பட்டதாக கூறிய 130 சவரன் நகையும் பீரோவில் பத்திரமாக உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தம்பதியினர் இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர். அதில், நேற்று தம்பதியினர் இருவரும் தனித்தனி அறையில் தூங்க சென்றதாகும், சரியாக 12.30 மணியளவில் வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் சாவி இருந்த நிலையில் கதவு திறந்து கிடந்ததால் பதற்றத்தில் தேடி பார்த்த போது 130 சவரன் நகையை காணவில்லை என நினைத்து புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு மனமுடைந்த போலீசார் அவசரத்துல அண்டாக்குல்ல கைய விட்டாலே போகாது, நிதானமாக தேடி பார்த்திருக்கலாமே என தம்பதியினருக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றனர். காலை முதலே பலரையும் பதற்றத்தில் ஆழ்த்திய தம்பதி வீட்டுக்குள்ளேயே நகையை வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Theft