மணிமங்கலம் பகுதியில் இருவரை போலீஸ் வேடமணிந்த கும்பல்தான் காதலர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் தற்போது போலீசார் இருவர் காதலர்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையத்தில் அமிர்தராஜ், மணிபாரதி ஆகியோர் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் மணிமங்கலம் எல்லைக்குட்பட்ட படப்பை, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஆரம்பாக்கம் பகுதியில் தனது திருமணத்திற்கு நிச்சயக்கப்பட்ட உறவுக்கார பெண்ணுடன் தனது காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த காவலர்கள் இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதலர்களிடம் பேச்சுக் கொடுத்தனர்.
பின் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறி மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர். இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் காவல்நிலையத்திற்கெல்லாம் வேண்டாம் என கூறிய அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவதாக காவலர்கள் பேரம் பேசியுள்ளனர்.
ஆனால் தங்களிடம் 4 ஆயிரம் ரூபாய் தான் உள்ளது என அவர்கள் கூறியதால் ஜி.பே மூலம் லஞ்சமாக பெற்றுவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்றதும் சிறிது நேரம் கழித்து கிருஷ்ணன் காவல் கட்டுபாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். தங்களிடம் போலீசார் என்று கூறி 2 பேர் மிரட்டி பணம் பறித்து சென்றதாக கூறியுள்ளார். மேலும் காவல்நிலையத்திற்கு நேரில் சென்றும் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிக்குழு அமைத்து காவலர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து ரகசியமாக விசாரணை செய்ததில் ஜி.பே மூலம் லஞ்சமாக பணம் பெற்றது உறுதியானது.
இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலர்களே ஜிபே மூலம் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சுரேஷ், சென்னை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Chennai, Crime News, Google pay