சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2ம் தளங்களில் திறந்து வைக்கப்பட்டிருந்த 5 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர். மறுநாள் காலை ஒவ்வொரு காவலர் குடும்பத்திலும் தங்களது வீடுகளில் நகை, செல்போன், பணம் திருடுபோயுள்ளது என கூறியதால் புதுபேட்டை காவலர் குடியிருப்பில் பரப்பரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து திருடுபட்ட காவலர் குடும்பத்தினர் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதுதான் மொத்தம் 5 காவலர்கள் குடும்பத்தில் திருடுபோனதும், திருடுபோன பொருட்களில் மொத்த மதிப்பு 16 சவரன் நகைகள், ரூ.34 ஆயிரம் மற்றும் 3 செல்போன்கள் என தெரியவந்தது. இதனையடுத்து எழும்பூர் போலீசார் காவலர் குடியிருப்புக்கு சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தபோது வெளி நபர்கள் யாரும் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து திருட்டில் ஈடுப்படவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், எழும்பூர் போலீசார் காவலர் குடியிருப்பில் சந்தேகப்படும்படியான நபர் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது எழும்பூர் ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளரின் மகன் திருட்டு சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் இருந்து காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மேலும் காணாமல்போன நபர் அவரது நண்பருடன் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருந்தபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில் 5 வீடுகளில் புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், விசாரணையில் திருடிய நபர்கள் எழும்பூர் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மகன் நந்தகோபால் (23) என்பதும் நந்தகுமாரின் நண்பரான புதுபேட்டையை சேர்ந்த அருண் (20) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்துவரும் காவல் உதவி ஆய்வாளர் மகன் நந்தகோபால் போதை பழக்கத்திற்கு உள்ளாகி தனது செலவுக்காக நண்பருடன் சேர்ந்து காவலர் குடியிருப்பில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது.
மேலும், இதே குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவலர் குடியிருப்பு கட்டிடத்திற்காக பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை அடிக்கடி திருடி கடையில் விற்று செலவு செய்து வந்ததும், அப்போது பலமுறை காவலர் குடும்பத்தினரால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் என்பதும், இவரது தந்தைக்காக காவல் நிலையத்தில் அப்போதெல்லாம் புகார் அளிக்காமல் காவல் குடும்பத்தினர் இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நந்தகோபால் மற்றும் அவரது நண்பர் அருணிடமிருந்து இருந்து திருடப்பட்ட 16 சவரன் நகைகள் ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News