ஹோம் /நியூஸ் /சென்னை /

நகை திருட்டு.. இருட்டு அறை.. ரூமுக்குள் ஒவ்வொருத்தராக அனுப்பப்பட்ட அரசு ஊழியர்கள்!

நகை திருட்டு.. இருட்டு அறை.. ரூமுக்குள் ஒவ்வொருத்தராக அனுப்பப்பட்ட அரசு ஊழியர்கள்!

நகை திருட்டு

நகை திருட்டு

சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் வெளியில் இருந்து வந்து யாரும் திருடவில்லை என தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

"நான் ரெண்டு நிமிஷம் லைட் ஆஃப் பண்றேன். அந்த நேரத்துல திருடுனவன் திருடுன பொருள எடுத்துட்டு போய் அந்த ரூம் ல வச்சிட்டு வந்துரு. உங்க மரியாதையாவது  மிஞ்சும்" என சொக்கத் தங்கம் திரைப்படத்தில் திருமண வீட்டில் திருடு போன பொருளை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கும் நடிகர் கவுண்டமணியிம் காமெடி வரும். இதே பாணியில் திருடப்பட்ட நகையை மீட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை எழும்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலக உதவியாளராக உஷா என்பவர் கடந்த 17ஆம் தேதி பணியை முடித்துவிட்டு இரவு அங்குள்ள ஓய்வறையில் படுத்து தூங்கியுள்ளார். காலையில் கண்விழித்த பார்த்த போது கழுத்தில் அணிந்து இருந்த 5 சவரன் தங்க தாலியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் உஷா புகார் அளித்ததன் அடிப்படையில் எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் வெளியில் இருந்து வந்து யாரும் திருடவில்லை என தெரிய வந்தது. பின்னர், அன்று இரவுப்பணியில் இருந்த 11 ஊழியர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தங்க நகை திருடியது மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து திருடிய நகையை மீட்பதற்காக, நூதனமான ஒரு வழியை எழும்பூர் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

அரசு ஊழியர்களை கைது செய்தால் வேலை காலியாகும் எனக்கூறி அதனால் ஒரு அறையின் லைட்டை ஆஃப் செய்துவிடுவதாகவும் திருடியவர் அங்கு சென்று நகையை வைத்துவிட்டு வந்துவிடலாம். இதனால் மற்ற நபர்களுக்கு யார் திருடியது என தெரியாது எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் 19ம் தேதி காலை காவல் ஆய்வாளர் முன்னிலையில் 11 நபர்களும் தனித்தனியாக இருட்டு அறைக்குள் அனுப்பப்பட்டனர். 11 பேரும் சென்று வந்த பின்பு சிறிது நேரம் கழித்து காவல் அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை செய்த போது 5 சவரன் தங்க தாலி உள்ளே இருந்தது.

இதனை தொடர்ந்து நகையை பறிகொடுத்த உஷா பெருமகிழ்ச்சி அடைந்தார். இருந்தபோதிலும் அரசு ஊழியர் என்பதால் கைது நடவடிக்கை எடுக்காமல் விட்ட காவல்துறையினர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

First published:

Tags: Chennai, Gold Theft, Police investigation