பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமாக நகைக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு மேல்தளத்தில் உள்ள வீட்டில் அவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, முன்பக்க ஷட்டர் வெல்டிங் மூலம் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 4 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து, மோப்ப நாயுடன் வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், தடயவியல் நிபுணர்களும் வந்து ஆதாரங்களை சேகரித்தனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் ஆதாரங்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைக்கடை கொள்ளை தொடர்பாக சம்பவ இடத்தில், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளை பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். அத்துடன், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இப்பகுதியில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளதாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். எனவே, குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Police, Crime News, Gold Theft