முகப்பு /செய்தி /சென்னை / காசு கொடுங்க அரசுவேலை ரெடி.. லட்சக்கணக்கில் சுருட்டிய தாய் மகள் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

காசு கொடுங்க அரசுவேலை ரெடி.. லட்சக்கணக்கில் சுருட்டிய தாய் மகள் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

மோசடியில் ஈடுபட்ட தாய், மகள்

மோசடியில் ஈடுபட்ட தாய், மகள்

Chennai cheating case | சென்னையை சேர்ந்த தாய் மகள் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் லட்சங்களை சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையில் அரசு வேலைவாங்கி தருவதாக கூறி வேளச்சேரி பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 67 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி உதயம் நகர், ஈ.பி.காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரபாவதி (வயது 62) இவரது மகள் நந்தினி ( வயது 38). இவர்கள் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நபர்களிடம் அரசு பள்ளிகளில் டீச்சர்,  மின்சாரத்துறையில் அலுவலராக மற்றும் துப்புரவு அலுவலகத்தில் பெரிய பணியிடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 10க்கும் மேற்பட்டவர்களிடம்  சுமார் ரூ. 67 லட்சம் வரை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித்தராமல் அலைக்கழித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் இதுவரை வேலை வாங்கி தராமல் இருப்பது குறித்து தாய் மகளிடம் கேட்டபோது ஒரு வாரத்தில் உங்களுக்கு அரசாங்க நியமன உத்தரவு வழங்குவதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். சொன்னதை போல் ஒரு வாரம் கழித்து அரசாங்க நியமன உத்தரவை தயார் செய்து கொடுத்துள்ளனர்.  அதை எடுத்துக்கொண்டு அரசாங்க வேலைக்கு சென்றபோது அந்த நியமன உத்தரவு ஆணை போலி என்பது தெரியவந்தது.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், இருவரையும் சும்மா விடக்கூடாது என கிளம்பி வந்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் பலரிடம் இந்த மோசடி வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாய், மகள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் தாய், மகள் இருவரும் ஏற்கனவே அதே பகுதியில் இதே வேளையை செய்து சிறைக்கு சென்று வந்தது தெரியவந்தது. சிறையில் இருந்து கடந்த ஆண்டு வெளிவந்த இவர்கள், மீண்டும் அதேவேலையை துணிச்சலாக தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.

தொடர்ந்து தாய், மகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இருவரும் காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்றுள்ளனர். இதனை கண்ட மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என கோஷமிட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர்.

First published:

Tags: Cheating, Chennai, Crime News, Money