முகப்பு /செய்தி /சென்னை / மாசி மாதத்தில் மார்கழியான சென்னை.. கொட்டும் பனியால் விடிந்தும் விலகாத இருள்!

மாசி மாதத்தில் மார்கழியான சென்னை.. கொட்டும் பனியால் விடிந்தும் விலகாத இருள்!

சென்னையில் பனி

சென்னையில் பனி

வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாதத்தில் இப்படி பனிமூட்டம் காலநிலை மாற்றத்தின் தாக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் பகல் நேரத்தில் கோடைகாலம் தொடங்கியது போல, வெயில் அதிகமாக இருந்தாலும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராய நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனியின் தாக்கம் காணப்பட்டது.

பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாதத்தில் இப்படி பனிமூட்டம் காலநிலை மாற்றத்தின் தாக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அளித்த விளக்கத்தில் “ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் கால மாதங்களாகும். அதன்படி பிப்ரவரியில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பகல் நேரங்களில் வெப்பம் காரணமாக நீர் நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே நகர்கிறது. இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்று இல்லாத காரணத்தினால், அந்த நீர்த்துளிகள் காற்றிலுள்ள தூசுக்களில் படிந்து இந்த மாதிரியான சூழலை நமக்கு தருகிறது. இது ஒருசில பகுதிகளில் நிகழக்கூடிய ஒன்று. தற்போது அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இந்த பனியின் தாக்கம் அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் குறைந்துவிடும்.” என தெரிவித்தார்.

மேலும் ஒரு வார காலமாக தொடர்ந்து பனிப்பொழிவு நீடிப்பதால் நெற்பயிர்களில் பனித்துளிகள் படர்ந்து அறுவடை பணிகளை கால தாமதமாக துவங்க வேண்டியுள்ளதாக டெல்டா மாவட்டத்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Chennai, Snowfall